ஐ.தே.க கூட்டணி செயலர் பதவியில் இழுபறி; செயற்குழுவில் இன்று முடிவு

வாக்கெடுப்பு நடைபெறும் சாத்தியம்

ரணில் -, சஜித் ஆதரவு தரப்புகள் இடையே உச்சக்கட்ட கருத்து மோதல்கள் திரைமறைவில் தொடரும் நிலையில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடவுள்ளதுடன், பொதுத் தேர்தலில் அமைக்கப்படவுள்ள கூட்டணி மற்றும் சின்னம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இதன்போது நடத்தப்படவுள்ளன.

அத்துடன், புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் தொடர்பிலும் இன்று இறுதி முடிவு எடுக்கப்பட இருப்பதாக அறிய வருகிறது. பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க சஜித் பிரேமதாஸ முடிவுசெய்தாலும் அவரை ஏற்றுக்கொள்ள முடியாதென ரணில் ஆதரவு தரப்பின் சில எம்.பிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இன்றைய தினம் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவிக்கு வாக்கெடுப்பு நடத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட இருப்பதாக அறிய வருகிறது.

ஐ.தே.கவின் மத்தியகுழு, பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடவுள்ளது.

பொதுத் தேர்தலில் அமைக்கப்படவுள்ள கூட்டணி, சின்னம் மற்றும் கூட்டணியின் பொதுத் செயலாளர் பதவிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படுமென ஐ.தே.கவின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

அமைக்கப்படவுள்ள கூட்டணியின் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவை சஜித் பிரேமதாச நியமித்துள்ள போதிலும் அதற்கு இன்னும் ஐ.தே.கவின் செயற்குழு ஒப்புதல் அளிக்கவில்லை. கூட்டணியின் செயலாளராக ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்கவை நியமிக்க வேண்டுமென ரணில் ஆதரவு தரப்பு எம்.பிகள் சிலர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் வினவிய போது,

பொதுத் தேர்தல் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எட்டும் முகமாக இன்று ஐ.தே.கவின் செயற்குழு கூடவுள்ளது. கூட்டத்தில் நாம் கலந்துகொள்வோம். எமக்குள் கருத்து முரண்பாடுகள் இல்லை என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Mon, 02/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை