சீனப் பொருட்களின் இறக்குமதி ஊடாக வைரஸ் பரவும் சாத்தியம் கிடையாது

இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கமுமில்லை

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களினூடாக கொரோனா வைரஸ் பரவுவதற்கான எந்த சான்றும் கிடையாது.எனவே சீனாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் அவசியமும் ஏற்படவில்லையென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

சகல வெளிநாட்டு பயணிகளையும் 14 நாட்கள் தடுத்து வைத்து மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்த வேண்டிய தேவை எழவில்லை என்றும் கூறிய அவர், நாட்டில் இந்த வைரஸ் பரவும் அபாயம் கிடையாது எனவும் கூறினார். 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,

நாட்டுக்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் இரு வாரங்கள் தடுத்து வைத்து பரிசோதனைக்குட்படுத்துவது சாத்தியமானதல்ல. அவ்வாறான தேவையொன்றும் உருவாகவுமில்லை.

சீனாவிலிருந்து வரும் பயணிகள் அந்நாட்டில் இருந்து மட்டுமன்றி வேறு நாடுகளிலிருந்தும் வருகின்றனர். அவர்களையும் இருவாரம் தடுத்து வைத்து பரிசோதனைக்குட்படுத்துவது சாத்தியமில்லை.

நாட்டுக்கு வரும் சகல பயணிகளினதும் உடல் உஷ்ணம் குறித்து ஆராயப்படுகிறது. அவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகிறது. தியத்தலாவ முகாமில் 33 மாணவர்களும் தேகாரோக்கியமாக உள்ளனர். நாட்டுக்கு விமானம் மூலமும் கப்பலூடாகவும் வரும் பயணிகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

சீன நாட்டவர்கள் இலங்கையில் நிர்மாணத்துறையில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு 14 நாட்கள் வரை தாமிருக்கும் இடங்களிலே தங்கியிருக்குமாறு அறிவூட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடமாடும் இடங்களில் சுற்றுவதை தவிர்க்குமாறும் முகக் கவசம் அணியுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் பீஜிங்,சங்ஹாய், போன்ற இடங்களுக்கான விமானச் சேவைகளை குறைக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணிவதற்கான கட்டாயம் எதுவும் கிடையாது.

கொரோனா பிரச்சினையால் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் எழுந்துள்ளன. சுற்றுலாத் துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவிலிருந்தே அதிக சுற்றுலா பயணிகள் வந்த நிலையில் வேறு நாடுகளை ஈர்ப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் 18.5 வீதமானவை சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் நிர்மாணத்துறையிலும் பாதிப்பு ஏற்படும் நிலைஉள்ளது.

வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கூடுதல் கவனம் செலுத்தினர். மக்கள் மத்தியில் வீணான பீதியை ஏற்படுத்த நாம் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். (பா)

லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம் 

 

Thu, 02/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை