செனட் வாக்கெடுப்பில் பதவி தப்பினார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானங்கள் செனட் சபையில் தோல்வியடைந்துள்ளன.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் டிரம்ப் மீதான அதிகார துஷ்பிரயோ குற்றசாட்டுக்கு எதிராக 52–48 வாக்குகள் பதிவானதோடு பிரதிநிதிகள் சபைக்கு இடையூறு செய்ததான குற்றச்சாட்டுக்கு எதிராக 57–47 வாக்குகள் பதிவாகின.

வாக்களிப்பில் பெரும்பான்மையான செனட்டர்கள் ஜனாதிபதி குற்றமற்றவர் என்று கூறியிருப்பதால், அமெரிக்க ஜனாதிபதி குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டதாக விசாரணைக்குத் தலைமை வகித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸ் அறிவித்தார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தனது போட்டியாளராக வரும் வாய்ப்பு உள்ள ஜோ பைடனுக்கு எதிராக விசாரணை நடத்த உக்ரைனுக்கு அழுத்தம் கொடுத்ததாகவே டிரம்ப் மீது ஜனநாயகக் கட்சியினரால் இந்த பதவி நீக்க விசாரணை கொண்டுவரப்பட்டது.

டிரம்புக்கு எதிராக ஏற்கனவே பிரதிநிதிகள் சபையில் பதவிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே செனட்டில் விசாரணை இடம்பெற்றது. கடந்த நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தனது இரண்டாவது தவணைக்காக போட்டியிடும் டிரம்ப் தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்தார்.

“ஜனாதிபதி டிரம்ப் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது அமெரிக்க மக்களின் பணிகளுக்கு திரும்ப வேண்டிய நேரம் இது” என்று டிரம்ப்பின் தேர்தல் பிரசாரக் குழு அறிவித்துள்ளது.

“ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க ஜனநாயகத்துக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளார். அவர் குடியரசுக் கட்சியினரின் சட்ட விரோதத்தை இயல்பாக்கிவிட்டார்” என்று பிரதிநிதிகள் சபை ஜனநாயக கட்சி சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

எனினும் செனட் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் அவர் மீதான தீர்மானங்கள் தோல்வி அடையும் என்பது முன்னரே எதிர்பார்க்கப்பட்டதாகும்.

Fri, 02/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை