ஐ.தே.மு: பெயர்,சின்னம் வார இறுதிக்குள் முடிவு

தேர்தல் செயலகத்திலும் பதிவு செய்ய ஏற்பாடு

ஐக்கிய தேசிய முன்னணியில் தேசிய கூட்டணியின் பெயரும்,சின்னமும் இவ்வார இறுதிக்குள் தீர்மானிக்கப் பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ள ஐ.தே.க. செயற்குழுவில் அங்கீகாரம் பெறப்படுமென, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். இதன் பின்னர் தேர்தல் திணைக்களத்தில் இதைப் பதிவுசெய்வதற்கு முடிவுசெய்துள்ளதாகவும்

அவர் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று நடந்த ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையில் இக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

இதன்போது முன்னணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க பிரேரிக்க உறுப்பினர் துஷார இந்துனில் ஆமோதித்தார்.

புதிய கூட்டணிக்கான பெயர், சின்னம் என்பவற்றை இவ்வார இறுதிக்குள் தீர்மானித்து அடுத்தவாரம் கூடும் கட்சியின் செயற்குழுவில் அங்கீகாரமும் கோரப் படவுள்ளது. மேலும் அன்றைய தினம் ஐ.தே.மு. தலைமையை ஏற்பதற்கான முடிவை சஜித் பிரேமதாஸ தெரிவிக்கவுள்ளதுடன், அதன் செயலாளராக ரஞ்சித் மத்துமபண்டாரவின் பெயரும் அறிவிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் அனைத்தும் புதிய தேசிய கூட்டணியில் இணைந்து செயற்படவுள்ளன. இந்த தேசிய கூட்டணியூடாக பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தெரிவு செய்யப் படவுள்ளனர்.

இதுவரையில் முன்னணியுடன் இணையாத சிறிய கட்சிகளை, இணையுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுக்கவுள்ளார். இதேசமயம் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளும் இம் மாதம் 15 ஆம் திகதிக்குப் பின்னர் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை இன்று வியாழக் கிழமை கூடவிருந்த ஐ.தே.க செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி திங்கட்கிழமை வரை பிற்போடப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீகொத்தா வட்டாரம் தெரிவித்தது.

எம்.ஏ.எம். நிலாம்

 

Thu, 02/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை