'சபரிகம' அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிராம சேவகர் பிரிவுகள் அபிவிருத்தி

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் ரூ. 2 மில். நிதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் 'கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம்' சிந்தனையின் கீழ் உருவாக்கப்பட்ட ‘சபரிகம’ சுபீட்சமான கிராமம் என்ற பெயரிலான அபிவிருத்தி வேலைத் திட்டத்துக்கு நாட்டிலுள்ள சகல கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 2 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

வெலிகம, கல்பொக்கை கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள மர்ஹூம் ஹுஸைன் ஹாஜியார் மக்கள் சேவை மன்றத்தை அபிவிருத்தி செய்யும் அங்குரார்ப்பண வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வெலிகம நகரசபையின் முன்னாள் தலைவர் எச்.எச். முஹம்மது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெலிகம பிரதேச செயலாளர் சுமித் சாந்தவும் கலந்துகொண்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கிராமத்துக்கு மிக அவசியம் எனக் கருதும் திட்டத்துக்கு முன்னுரிமை இதன் மூலம் வழங்கப்படவுள்ளது. அக்கிராம மக்களின் தேவைகளை அறிந்து அவர்களால் முன்வைக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு முதலிடம் வழங்கப்படவுள்ளது.

இவ்வேலைத் திட்டமானது ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷவின் சிந்தனையில் கிராமத்துக்கு வழங்குகின்ற முதல் அபிவிருத்தித் திட்டமாகும். நாட்டிலுள்ள எல்லா கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இது அமுல்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் நாடளாவியரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கிராமங்களை பலமானதாக ஆக்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். கல்பொக்கையில் அமைந்துள்ள இரண்டு கிராமசேவகர் பிரிவுகளுக்கும் 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ்வைபவத்தில் மதகுருமார்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

வெலிகம தினகரன் நிருபர்

Tue, 02/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை