மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி உதயம்

சுதந்திரக் கட்சி உட்பட 9 கட்சிகள் மொட்டுச் சின்னத்தில் போட்டி

கட்சிகளை பதியும் பணி நேற்றுடன் நிறைவு; 70 கட்சிகள் விண்ணப்பம்

தவிசாளராக மைத்திரிபால சிறிசேன

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான லங்கா சுதந்திர பொதுஜனக் கூட்டமைப்பை புதிய கட்சியாகப் பதிவு செய்வதற்காக நேற்று தேர்தல் ஆணைக் குழுவில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

இதன் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, செயலாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

'ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு' எனும் இப்புதிய கூட்டணியின் கீழ், மொட்டுச் சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சு.க மற்றும் பொதுஜன பெரமுன செயலாளர்கள் தெரிவித்தனர்.

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

இந்நிலையிலே, ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை சு.க செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல் ஆணைக்குழுவில் கையளித்தார். நேற்று மாலை 4 மணி வரை அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அவகாசம் வழங்கியிருந்தது. இதுவரை சுமார் 70 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலான விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத வை என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகின.

இதற்கிணங்க இதுவரைக்கிடைத்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட இருப்பதாக ஆணைக்குழு உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தநிலையில் பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை சு.க செயலாளர் தயாசிரி ஜயசேகர நேற்று கையளித்தார்.

பொதுஜன பெரமுன செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட இரு கட்சிகளின் முக்கியஸ்தர்கள் நேற்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்தனர்.

புதிய கூட்டணியின் பிரதித் தலைவராக அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் தேசிய அமைப்பாளர்களாக தயாசிறி ஜயசேகர, விமல் வீரவன்ச ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

பிரதிச் செயலாளராக மஹிந்த அமரவீரவும் உப செயலாளராக உதய கம்மம்பிலவும் உப தவிசாளர்களாக திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதற்கமைய பொதுஜன பெரமுன,சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 09 கட்சிகள் இணைந்து பொதுத் தேர்தலில் கூட்டணியாகப் போட்டியிட்டவுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொதுஜன பெரமுன செயலாளர் சாகர காரியவசம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவும் சுதந்திரக் கட்சியும் இணைந்து மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும். எமது கோரிக்கையை தேர்தல் ஆணைக் குழு தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.

பொதுத் தேர்தல் வெற்றிக்காக பாரிய கூட்டணியை உருவாக்கத் தேவையான ஆவணங்கள் கையளிக்கப் பட்டுள்ளன. இதன் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவார். எதிர்காலத்தில் சகல கட்சிகளுடனும் புரிந்துணர்வுடன் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சு.க செயலாளர் தயாசிறி ​ஜயசேகர,தேர்தல் ஆணைக்குழுவில் புதிய கூட்டணிக்கு எழுத்துமூலம் அனுமதி கோரியதாகவும் பொதுஜன பெரமுன.சு.க உள்ளிட்ட 9 கட்சிகள் இந்த கூட்டணியில் அடங்குகின்றன.

இதனை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டோம்.கூட்டணி கட்சிகள் இணைந்து எதிர்வரும் நாட்களில் தேவையான முடிவுகளை எடுக்கும் எனவும் அவர் கூறினார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த திகதியில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் தேர்தல் நடத்தும் முடிவுக்கமைய ஏப்ரல் 25 இல் தேர்தல் நடைபெறலாம் என அறியவருகிறது.

பொதுஜன பெரமுனவும் சுதந்திரக் கட்சியும் கூட்டணி அமைப்பது தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டதோடு சு.க தனித்து போட்டியிட வேண்டுமென ஒரு தரப்புக் கூறிவந்தது. இந்த நிலையிலே இணைந்து போட்டியிடுவதற்கு கூட்டணி அமைக்கப்படவுள்ளது.

இதே வேளை, பொதுஜன பெரமுன தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீல.சு.க தலைவர் மைத்திரிபால சிரிசேனவிற்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற விருப்பது குறிப்பிடத்தக்கது. (பா)

ஷம்ஸ் பாஹிம்

Tue, 02/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை