பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வெற்றி

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 44 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-–0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

ராவல்பிண்டி மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 233 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, மொஹமட் மிதுன் 63 ஓட்டங்களையும், நஜ்முல் ஹொசைன் சந்தோ 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஷாயீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும், மொஹமட் அப்பாஸ் மற்றும் ஹரிஸ் சொஹைல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நஷீம் ஷா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 445 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, பாபர் அசாம் 143 ஓட்டங்களையும், ஷான் மசூத் 100 ஓட்டங்களையும், ஹரிஸ் சொஹைல் 75 ஓட்டங்களையும், அசாட் சபீக் 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், அபு ஜெயிட் மற்றும் ரூபெல் ஹொசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், தைஜூல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும், எபடொட் ஹொசைன் 1 விக்கெட்டினையும் விழ்த்தினர்.

212 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணியால், 62.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 44 ஓட்டங்களால் வெற்றிபெற்றியை பதிவு செய்தது.

இதன்போது பங்களாதேஷ் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, மொமினுல் ஹக் 41 ஓட்டங்களையும், நஜ்முல் ஹொசைன் சாந்தோ 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், நஷிம் ஷா மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், ஷாயீன் அப்ரிடி மற்றும் மொஹமட் அப்பாஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 16 வயதில் ஹொட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்த நஷிம் ஷா தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 02/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை