மலையகத்தில் காட்டுத்தீ பரவும் அபாயம்; வனவிலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல்

நான்கு மாவட்டங்களுக்கு இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் எச்சரிக்கை

பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பிரதான காடுகள், மானாப் புற்கள் போன்றவற்றுக்கு தீ வைக்கப்படுவதால், வனவிலங்குகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்களத்தின் வனவிலங்கு பாதுகாவலர் பிரஹாஷ் கருணாதிலக்க தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

தற்போது நிலவிவரும் வரட்சியான காலநிலையை அடுத்து, வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் விஷமிகள் செயற்பட்டு வருகின்றனர். எனவே இவ்விடயத்தில் ஒவ்வொருவரும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வது அவசியம். காடுகளுக்குத் தீ வைப்பதால், பாலூட்டிகள், ஊர்வன, பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள், தேயிலைத் தோட்டங்களை நோக்கிப் படையெடுக்கின்றன. தேயிலைத் தோட்டங்களை நோக்கி வரும் அவற்றை மிக சுலபமாக வேட்டையாடுவதே அவர்களின் நோக்கம். காடுகளுக்கு தீ வைப்பதால் இலங்கைக்கே உரித்தான மலைச் சிறுத்தை, சிறுத்தை என்பவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

தனது வாழ்விடத்தை விட்டு தேயிலைத் தோட்டமொன்றுக்கு வந்த மான் குட்டியொன்றை, நல்லுள்ளம் கொண்ட நபரொருவர் வேட்டையர்களின் கண்களுக்குப்படுவதற்கு முன்பாக அதனை மீட்டு, பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்றும், நேற்று முன்தினம் (10) இடம்பெற்றது. வாழ்விடங்களை விட்டு தேயிலைத் தோட்டங்களுக்குள் நுழையும் காட்டு விலங்குகள், இவ்வாறு உயிருடன் மீட்கப்படுவது அரிதான செயலென்றும் அவர் தெரிவித்தார்.

வனவிலங்குகள் விடயத்தில், மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள அவர், காடுகளுக்குத் தீ மூட்டுவோர், விலங்குகளை வேட்டையாடுவோர் குறித்து, பொதுமக்கள் தங்களது பிரதேசத்துக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குத் தகவல் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் நாட்டில் நான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, மொனராகலை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் காட்டுத் தீ பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜானக ஹந்துன் பத்திராஜ தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இச் சம்பவங்களில் எவரேனும் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Wed, 02/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை