சிரிய படை மீது தாக்குதல் நடத்த துருக்கி எச்சரிக்கை

மற்றொரு துருக்கி வீரருக்கு பாதிப்பு ஏற்பட்டால் சிரியாவெங்கும் வான் மற்றும் தரை வழியாக சிரிய அரச படை மீது துருக்கி இராணுவம் தாக்குதல் நடத்தும் என்று துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் நேற்று எச்சரிக்கை விடுத்தார்.

வட மேற்கு இத்லிப் பிராந்தியத்தில் துருக்கி கண்காணிப்புச் சாவடிகளுக்கு அப்பால் பெப்ரவரி இறுதிக்குள் சிரிய அரச படையை பின்வாங்கச் செய்வது துருக்கியின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கடைசி கோட்டையான இத்லிப்பை கைப்பற்ற அரச படை தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் அண்மைய வாரங்களில் துருக்கியின் தெற்கு எல்லையில் மோதல் அதிகரித்துள்ளது.

கடந்த பத்து நாட்களில் சிரிய அரச படையின் தாக்குதல்களில் 13 துருக்கி வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் துருக்கி இராணுவம் பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

“கண்காணிப்புச் சாவடி அல்லது வேறு எந்த இடத்திலாவது எமது படை வீரர்களுக்கு சிறு காயமேனும் ஏற்பட்டால் இத்லிப் எல்லைகள் அல்லது சொச்சி உடன்படிக்கை கோடுகள் பொருட்படுத்தப்படாமல் இன்றிலிருந்து எந்த இடத்திலும் அரச படை மீது நாம் தாக்குதல் நடத்துவோம்” என்று எர்துவான் குறிப்பிட்டார்.

கிளர்ச்சியாளர்களின் கடைசி கோட்டையாக இருக்கும் இத்லிப்பில் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கு இடையே 2018 இல் சொச்சியில் உடன்படிக்கை ஒன்று ஏற்பட்டது. எனினும் அதனை மீறி ரஷ்ய வான் தாக்குதல்களின் உதவியோடு ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் அரச படை அந்த பிராந்தியத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு கடும் குளிருக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஓர் அரிதான நகர்வாக ரஷ்யா மீது எர்துவான் நேரடி தாக்குதல் தொடுத்துள்ளார்.

“ரஷ்ய படைகள் மற்றும் சிரிய ஆதரவு போராளிகளின் உதவியோடு அரச படைய தொடர்ச்சியாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி கூட்டுப்படுகொலைகள் மற்றும் இரத்த ஆறு ஓடச்செய்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Thu, 02/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை