ஆசிய- உலக பதினொருவர் அணிகள் அறிவிப்பு

ஒட்டுமொத்த கிரிக்கெட் இரசிகர்களையும் கொண்டாட வைக்கும் வகையில், ஆசிய பதினொருவர் நட்சத்திர அணிக்கும் உலக பதினொருவர் நட்சத்திர அணிக்குமிடையிலான போட்டித் தொடரொன்றை நடத்த, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயமே.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள இத்தொடரில் விளையாடவுள்ள இரு அணிகளின் விபரங்களையும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதற்கான ஆசிய பதினொருவர் நட்சத்திர அணியில், ஆறு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆசியா பதினொருவர் அணியில் பெயரிடப்பட்ட ஆறு இந்திய வீரர்களில் விராட் கோஹ்லியும் உள்ளார்.

கே.எல்.ராகுலும் ஒரு போட்டியில் பங்கேற்க உள்ளார். ஷிகர் தவான், ரிஷாப் பந்த், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆசிய பதினொருவர் அணியில், இலங்கை அணியின் வீரர்களான லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார். தொடரை நடத்தும் பங்களாதேஷ் அணியில், முஸ்தாபிஸூர் ரஹ்மான், தமீம் இக்பால், முஷ்பிகூர் ரஹீம், லிட்டன் தாஸ், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் முஜிப் உர் ரஹ்மான், நேபாளத்தின் சந்தீப் லமேச்சேன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். எனினும், இந்த அணிக்கு தலைவர் நியமிக்கப்படவில்லை.

உலக பதினொருவர் நட்சத்திர அணியை பொறுத்தவரை அணித்தலைவராக தென்னாபிரிக்காவின் டு பிளெஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து வீரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோனி பேயர்ஸ்டொவ், அடில் ராஷித் ஆகியோர் உலக பதினொருவர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களான, கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரான், கிரன் பொலார்ட், செல்டோன் கொட்ரெல் ஆகியோர் உலக பதினொருவர் அணியில் இடம்பெற்றுள்ளனர். நியூஸிலாந்து அணியில் மிட்செல் மெக்லிகனும், தென்னாபிரிக்கா அணியில் லுங்கி ங்கிடியும், சிம்பாப்வே அணியில் பிரெண்டன் டெய்லரும் உலக பதினொருவர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ரி-20 போட்டியாக நடைபெறவுள்ள இத்தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இத்தொடரின் முதல் போட்டி எதிர்வரும் மாதம் 21ஆம் திகதி டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது ரி-20 போட்டி 22ஆம் திகதி டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பங்களாதேஷ் நாடானது 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி பாகிஸ்தானிலிருந்து பிரிந்து ஒரு தனி நாடாக உருவாகுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஷேக் முஜீபுர் ரஹ்மான் எனும் தனி மனிதனாகும். 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி பிறந்த இவர் பங்களாதேஷுக்கு தனியான சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்துவிட்டு 1975ஆம் ஆண்டு தனது 55 ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில் அடுத்த வருடம் ஷேக் முஜீபுர் ரஹ்மான் எனும் சுதந்திர போராட்ட வீரர் பிறந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. எனவே 100 ஆண்டுகள் நிறைவு நிகழ்வை மிகவும் கோலாகலமான முறையில் நடாத்துவதற்கு பங்களாதேஷ் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாகவும். அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது இவ்வாறு ஷேக் முஜீபுர் ரஹ்மான் அவர்களின் 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரு போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை ஏற்பாடு செய்துள்ளது.

ஆசிய பதினொருவர் அணி என்பது, சர்வதேச கிரிக்கெட் சபையினால் அந்தஸ்து பெற்று கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுகின்ற ஆசிய அணிகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான், நோபளம் போன்ற அனைத்து அணிகளிலிருந்தும் திறமைவாய்ந்த 11 வீரர்களை கொண்டமைந்த அணியாகும்.

அதே போன்று உலக பதினொருவர் அணி என்பது சர்வதேச கிரிக்கெட் சபையினுடைய அந்தஸ்து கொண்டுள்ள ஆசிய அணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அணிகளினுடைய 11 வீரர்களை கொண்டமைந்த அணியாகும்.

டெஸ்ட், ஒருநாள், ரி-20, ஒவ்வொரு நாடுகளுக்குமான தனித்துவமான ரி-20 தொடர், 10 ஓவர்கள் கொண்ட போட்டி என பல்வேறு போட்டிகளை பார்த்து இரசித்த இரசிகர்களுக்கு, இப்போட்டித் தொடர் புதுவிதமான அனுபவத்தை கொடுக்கவுள்ளது.

Thu, 02/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை