மலேசிய பிரதமர் மஹதிர் இராஜினாமா

மலேசியாவில் புதிய அரசு ஒன்றை அமைப்பதற்கு வழிவிடும் வகையில் அந்நாட்டு பிரதமர் மஹதிர் மொஹமட் தனது இராஜினாமா அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

மஹதிர் வெளியிட்டிருக்கும் இரு வரி அறிவித்தலில், தனது இராஜினாமாவை நாட்டு மன்னருக்கு அறிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் பகதான் ஹரபான் கூட்டணியில் இருந்து மஹதிரின் ப்ரிபுனி பெர்சாது கட்சி விலகி இருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த பிரதமராக வாக்குறுதி அளிக்கப்பட்ட அன்வர் இப்ராஹிமை நீக்கிவிட்டு புதிய அரசொன்றை அமைப்பதற்கு மஹதிரின் கட்சி திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் கூட்டணி அரசுக்குள் குழப்பம் நீடித்து வரும் நிலையில் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஊகிக்க முடியாத சூழல் நீடித்து வருகிறது.

ஒருவேளை நடப்பு அரசியல் குழப்பங்களை மனதிற்கொண்டு மலேசிய மாமன்னர் மீண்டும் பொதுத்தேர்தலை நடத்த உத்தரவிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

நீண்ட காலம் எதிரிகளாக இருந்து நண்பர்களான மலேசியாவின் முக்கிய அரசியல் தலைவர்களான 94 வயது மஹதிருக்கும் 72 வயது அன்வருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அன்வர் மற்றும் மஹதிர் கூட்டணி மலேசியாவில் ஆறு தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த பரிசான் தேசிய கூட்டணியை தோற்கடித்து ஆட்சியை பிடித்தது.

எனினும் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு பிரதமர் பதவியை தமக்கு வழங்குவதற்கான காலம் குறித்து இந்த இரு தலைவர்களுக்கும் இடையே அண்மைக்காலத்தில் முறுகல் வெடித்தது.

இதனால் இந்தக் கூட்டணியின் செல்வாக்கு வீழ்ச்சி கண்டு அண்மையில் நடைபெற்ற ஐந்து தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது.

மலேசிய அரசியலில் செல்வாக்கு மிக்கவரான மஹதிர் இதற்கு முன்னர் 1981 தொடக்கம் 2003 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்துள்ளார். ஆரம்பத்தில் மஹதிருக்கு இரண்டாமவராக இருந்த அன்வர் இப்ராஹிமுடன் பொருளாதார பிரச்சினையை கையாள்வது தொடர்பில் ஏற்பட்ட முறுகலால் 1998 ஆம் ஆண்டு அவர் பதவி நீக்கப்பட்டார்.

பின்னர் ஒருபாலுறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு அன்வர் இப்ராஹிம் சிறை வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 02/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை