ஆப்கான் ஜனாதிபதி தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி அறிவிப்பு

கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கானி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளால் முடிவுகள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது.  

கானி 50.64 வீத வாக்குகளை வென்று மீண்டும் வெற்றி பெற்றிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  

அவரது பிரதான போட்டியாளரான அப்துல்லாஹ் அப்துல்லாஹ் 39.52 வீத வாக்குளை பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். எனினும் தாம் வெற்றி பெற்றதாக அறிவித்திருக்கும் அவர் சொந்த அரசொன்றை அமைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.  

செப்டெம்பர் 28 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் பாரிய மோசடிகள் மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் இருந்ததாக கானியின் போட்டியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  

இந்தத் தேர்தலில் மிகக் குறைவான வாக்குப் பதிவே இடம்பெற்றிருந்தது. சுமார் 37 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஆப்கானிஸ்தானில் 9.6 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் முறைகேடு நடந்ததாக சுமார் ஒரு மில்லியன் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதோடு 1.82 மில்லியன் வாக்குகளே எண்ணப்பட்டன.  

தலிபான்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே மிகக் குறைவான வாக்குப் பதிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.      

Thu, 02/20/2020 - 12:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை