ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வு: நியூ ஹாம்சயரில் சான்டர்ஸ் வெற்றி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான நியூ ஹாம்சயர் மாநிலத்தின் உட்கட்சித் தேர்தலில் பெர்னி சான்டர்ஸ் வெற்றியீட்டியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

இடதுசாரி செனட்டரான சான்டர்ஸ், மையவாத முன்னாள் மேயரான பீட் பட்டிகீக்கை தோற்கடித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடுவதற்கே ஜனநாயகக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை தேர்வுசெய்யும் நடைமுறையை முன்னெடுத்துள்ளது.

டிரம்பின் முடிவுக்கான ஆரம்பம் இது என்று சான்டர்ஸ் தனது வெற்றி குறித்து குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற அயோவா மாநிலத்திற்கான உட்கட்சித் தேர்தலிலும் முன்னிலை பெற்று தற்போது நியூ ஹாம்சயரிலும் வெற்றியீட்டி இருப்பது சான்டர்ஸ் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் இரு மிதவாதிகளான பட்டிகீக் மற்றும் மின்னிசோட்டா செனட்டர் அமி க்ளோபுச்சர் முறையே இரண்டு மூன்றாவது இடங்களை பெற்றிருப்பது எதிர்பாராத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இரு முன்னணி வேட்பாளர்களாக கருதப்படும் மசசுட்ஸ் செனட்டர் எலிசபத் வொர்ரன் மற்றும் பைடன் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களையே பிடித்தனர்.

தொழிலதிபரான அன்ட்ரூ யங் மற்றும் கொலொராடோ செனட்டர் மைக்கல் பென்னட் இருவரும் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.

நியூ ஹாம்சயரில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் சுமார் 280,000 ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள் தமது வாக்கை அளித்தனர். இதில் 78 வயதான சான்டர்ஸ் 26 வீதமான வாக்குகளை வென்றார்.

எனினும் அவரால் 38 வயதான பட்டிகீக்கை விடவும் 1.6 வீத வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற முடிந்தது.

அடுத்து வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி நவாடா மாநிலத்தில் உட்கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

மாநிலங்கள் அடிப்படையிலான உட்கட்சி வாக்கெடுப்புக்கு பின் வரும் ஜூலை மாதம் விஸ்கோசினில் நடைபெறும் கட்சி மாநாட்டில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுசெய்யப்படவுள்ளார்.

Thu, 02/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை