வாக்குறுதிகளை நிறைவேற்றினால் அரசுக்கு ஆதரவு வழங்க ஐ.தே.க தயார்

அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமானால் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க ஐ. தே. கட்சி தயாராகவே உள்ளதென அஜித் மா னப்பெரும எம்.பி தெரிவித்தார்.

ஐ. தே. க. தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்:

அரசாங்கம் தேர்தலுக்கு முன்னரும் தேர்தலுக்குப் பின்னரும் நாட்டு மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. எனினும் அவற்றை நிறைவேற்ற முன்வரவில்லை.

ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்புப் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்துள்ள போதும் அது இடம்பெறவில்லை. அதனால் தினமும் பட்டதாரிகளும், ஆசிரியர்களும் கொழும்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது தொடர்கிறது.

தேர்தலுக்கு முன்னர் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை என்ன என்று மக்களிடம் கேள்வி கேட்டே அவர்கள் மக்கள் ஆதரவைப் பெற்றனர். இன்று நிலைமை என்ன? வெங்காயம், மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தலைக்கு மேல் ஏறியுள்ளன. அந்தவகையில் அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளதாகவே கருத முடிகிறது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைந்துள்ள போதும் அதன் பிரதிபலன்கள் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. ஆனால் மக்களுக்குத் தெரியாமலே சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் நீர்வெட்டு இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட பிரதமர், அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்துவதில் கால அவகாசத்தை இந்தியாவிடம் கோரியுள்ளார். அதற்காக இந்தியா சென்ற அவர், 68 பேரை அவருடன் அழைத்துச் சென்றார். அவர்களுக்கான செலவு மிகவும் அதிகமானது. கடனை மீள செலுத்துவதற்கு கால அவகாசம் கேட்கச் செல்வது இவ்வாறுதானா என நாம் அரசாங்கத்தைக் கேட்க விரும்புகின்றோம். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 02/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை