வவுணதீவில் பொலிஸ் சார்ஜன்ட் அடித்து கொலை; இருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் தமிழ் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப் பட்டார். அதேநேரம் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் சார்ஜனது சடலம் நேற்றுக் காலை அவரது பண்ணை வீட்டின் முன்பாக உள்ள வீதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தம்பாப்பிள்ளை சிவராசா என்பவரே கொல்லப்பட்டவராவர்.

நேற்று முன்தினம் இரவு பொலிஸ் சார்ஜன்ட் வவுணதீவு ஆயித்தியமலை வீதியிலுள்ள 3ஆம் கட்டை பிரதேசத்தில் தனது பண்ணைக்கு சென்றிருந்த நிலையில் இரவு 11 மணியளவில் பண்ணையிலிருந்து வீதிக்கு வந்தபோது அங்கு இருவர் பதுங்குவதை கண்டுள்ளார். அவர்களை யாரென கேட்ட போது, அவர்கள் மது அருந்துவதாகவும் தெரிவித்தனர். இதன்போது பொலிஸ் சார்ஜன்ட், ‘இல்லை நீங்கள் மாடு களவு எடுக்க வந்துள்ளீர்களா? எனக்கேட்ட போது, அவர்கள் சார்ஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இருவருக்கும் இடையில் கைகலப்பு மூண்டதையடுத்து சார்ஜன்ட் மீது இருவரும் அங்கிருந்த பொல்லால் தலையில் தாக்கியுள்ளனர். இதன் காரணமாக அவர் வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவரின் உடலை இழுத்து வீதியின் ஓரத்தில் போட்டுவிட்டு இருவரும் தப்பி ஓடியுள்ளனரென இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆயித்தியமலை தேவாலய வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய முகமட் அஸ்மி, வவுணதீவு நாவற்காடு ஈச்சந்தீவைச் சேர்ந்த குணசேகரன் சுரேந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டதாகவும் இவர்கள் அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்துவருவதாகவும் கைது செய்யப்பட்ட முகமட் அஸ்மிக்கு, அடிகாயங்கள் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். சம்பவ இடத்திற்கு கிழக்கு மாகாண சிரேஷட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்த்தன, மட்டக்களப்பு உதவி பொலிஸ் மாஅதிபர். லக்ஷ்சிறி விஜயசேகர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான் மெண்டிஸ் ஆகியோர் சென்று பார்வையிட்டு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொலிஸாருக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

கல்லடி குறூப், பெரியபோரதீவு தினகரன், மட்டக்களப்பு குறூப், புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்

Fri, 02/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை