ஜனாதிபதியால் மாத்திரமே தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியும்

பெரும்பான்மை மக்களால் தெரிவுசெய்யப்படும் ஒரு ஜனாதிபதியால் மாத்திரமே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியும். 2010ஆம் ஆண்டு கிடைத்த சந்தர்ப்பத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நழுவ விட்டிருந்தார். தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அச் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. தமிழர்களையும், முஸ்லிம்களையும் அழைத்து தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வுகான அவர் முற்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

வலப்பனை பிரதேசம் நுவரெலியா மாவட்டத்தில் முக்கியமான பிரதேசமாகும். இப் பிரதேசத்தில் இரண்டு பிரதேச செயலகங்களை ஏற்படுத்த அண்மையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த போதிலும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட விதம் பிழையாக உள்ளதென அங்கு போராட்டங்கள் வெடித்திருந்தன.

அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டங்களில் இது தொடர்பில் நாம் பேச்சுக்களை நடத்தியுள்ளோம்.

இதனை இரண்டாக பிளவுப்படுத்தும் போது அங்குள்ள சிங்கள, தமிழ் மக்களுக்கு தமது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத அசாதாரண நிலை தோற்றுவிக்கப்பட்டும்.

பெரும்பான்மையான மக்கள் வசிக்கின்ற இல்லன்டா இன்ன என்ற இடத்தில் அதாவது நான்கு கி.மீக்கு அருகாமையிலேயே மற்றுமொரு பிரதேச செயலகத்தை உருவாக்க முற்பட்டுள்ளனர்.

இது முற்றிலும் தவறானது. இதற்கு எதிராக நடவடிக்கையெடுக்கும்படி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நாம் தீர்மானமொன்றை நிறைவேற்றி அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளோம். துறைசார் அமைச்சர் இதனை நிவர்த்தி செய்ய வேண்டும்.

அதேபோன்று ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தேயிலைக் கொழுந்து பறிக்கும் ஒரு தாயை சிலையாக வடித்திருந்தனர். அதனை உடனடியாக அகற்றுமாறு வலியுறுத்தப்பட்டு அச்சிலை தற்போது கொட்டகலை நகரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

75 சதவீதம் மலையக மாணவர்கள் கல்விபயிலும் ஸ்ரீபாத கல்லூரியில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது மலையக மக்களை உதாசீனப்படுத்தி புறக்கணிக்கும் செயற்பாடாக பார்க்கின்றோம் என்றார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 02/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை