உலகளாவிய ‘வைரஸ்’ அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க தயாராகும் உலக நாடுகள்

சீனாவுக்கு வெளியில் வேகமாக பரவல்

புதிய கொரோனா வைரஸ் உலகெங்கும் வேகமாக பரவ ஆரம்பித்திருக்கும் நிலையில் உலகளாவிய தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க அரசுகள் தயாராகி வருகின்றன. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் முதல் முறை சீனாவுக்கு வெளியில் அதிக பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.

அவுஸ்திரேலியா அவசர நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதோடு, இந்தத் தொற்றுக்கு முகம்கொடுக்கும் அச்சுறுத்தல் அளவை தாய்லாந்து அதிகரித்துள்ளது. சர்வதேச சுகாதாரப் பிரச்சினையை ஏற்படுத்தும் இந்த வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு அந்நாட்டு துணை ஜனாதிபதி மைக் பென்ஸை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொறுப்பாக நியமித்துள்ளார்.

கொவிட்–19 என உலக சுகாதார அமைப்பினால் பெயரிடப்பட்டிருக்கும் இந்த வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் உள்ள காட்டு விலங்கு சந்தை ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் இந்த வைரஸ் மனிதர்களிடம் தொற்றியதாக நம்பப்படுகிறது.

உலகளாவிய தொற்றுநோய் என்ற அடிப்படையில் தமது நாடு இந்த வைரஸுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் 32 பேருக்கு புதிக கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மருத்துவனைகளில் போதுமான மருத்துவ வசதிகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் இருப்பது உறுதி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோய் நிலையை விரைவில் ஏற்படுத்தும் என்ற சமிக்ஞைகளையே காட்டி வருகிறது” என்று கன்பர்ராவில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் மொரிசன் தெரிவித்தார்.

“இதற்கு ஏற்ப கொரோனா அவசரநிலை திட்டத்தை முன்னெடுக்க இன்று நாம் இணங்கியுள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

வைரஸ் அச்சம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சி கண்டு, எண்ணெய் விலை குறைந்துள்ளது.

3.6 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான இழப்பை சந்தித்து உலக சந்தை தொடர்ச்சியாக ஆறாவது நாளாக சரிவை எதிர்கொண்டது.

கொரோனா வைரஸ் தற்போது 80,000க்கும் அதிகமானவர்களுக்கு தொற்றி இருப்பதோடு சுமார் 2,800 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து சீனாவிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து இன்றும் முழுமையான தெளிவு கிடைக்காதபோதும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனா ஒரு மாதத்திற்கு மேலாக முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

இந்த வைரஸ் மாறுபட்ட இடங்களுக்கு பரவியுள்ளது. குறிப்பாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரிய நாடுகளில் நிலைமை மோசமடைந்துள்ளது. அண்மைய தினங்களில் இது ஒரு உலகளாவிய தொற்றுநோயாக உருவெடுக்கும் ஆபத்து அதிகரித்திருக்கும் நிலையில் உசார் நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு வெளியில் 3,246 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 51 பேர் உயிரிழந்திருப்பதாக ரோய்ட்டர் செய்தி நிறுவனத்தின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

டென்மார்க்கில் முதல் முறை வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. இத்தாலியில் இருந்து வந்த ஒருவரிடமே வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. ஈரானில் இருந்து திரும்பிய ஒருவரிடம் இருந்து எஸ்தோனிய நாட்டிலும் முதல் முறை கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.

லத்தீன் அமெரிக்காவில் முதல் நாடாக பிரேசிலில் வைரஸ் தொற்று சம்பவம் கடந்த புதன்கிழமை உறுதியானது. பாகிஸ்தான், ருமேனியா மற்றும் அல்ஜீரியா உட்பட மேலும் பல நாடுகளிலும் முதல் முறை புதிய கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் நேற்று புதிதாக வைரஸ் தொற்றிய 433 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய தினத்தில் 406 வைரஸ் தொற்றியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் சீனாவில், இதுவரை இல்லாத வகையில் கொவிட்–19 வைரஸ் தொற்றுக்குப் பலியானோரின் எண்ணிக்கை ஆகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.

அண்மை நிலவரப்படி வைரஸ் தொற்றால் மேலும் 29 பேர் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து சீன பெருநிலத்தில் மாண்டோர் எண்ணிக்கை மொத்தம் 2,744 உயர்ந்துள்ளது.

தென் கொரியாவில் புதிதாக 334 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சீனாவுக்கு வெளியில் அதிகப்படியாக தென் கொரியாவில் மொத்தம் 1,595 பேருக்கு வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.

தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவருக்கு வைரஸ் தொற்றியிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து தென் கொரியாவுக்கான புதிய பயண எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. தென் கொரிய நகரான டெகுவுக்கு அருகில் நிலைகொண்டிருந்த 23 வயது வீரர் ஒருவருக்கு வைரஸ் தொற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென் கொரிய இராணுவ வீரர்கள் பலருக்கு வைரஸ் தொற்றி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையிலேயே அடுத்த அறிவித்தல் வரை அமெரிக்க மற்றும் தென் கொரிய கூட்டு இராணுவ பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பயணத் தடைகள், பயணங்கள் ரத்து செய்யப்படுவது மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வைரஸ் சர்வதேச விமானப் போக்குவரத்துகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோல் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸுக்கு இடையிலான விமானப் பயணத்தில் பணியாற்றும் விமான ஊழியர் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது பயணிகளிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கொரோனா வைரஸ் பரவல் உலக அளவில் துரிதமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு வெளியே உலகளவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் முதன் முறையாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

இதுவரை 40க்கும் மேற்பட்ட நாடுகளில் கொவிட்–19 வைரஸ் பரவியுள்ளது. அதை முன்னிட்டு, உலக நாடுகள் அனைத்தும் நிலைமையைச் சமாளிக்க ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வலியுறுத்தினார்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்று 25 வீதம் உயிர்ந்துள்ளது. இதுவரை இத்தாலியில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொழில் வளம் அதிகம் உள்ள இத்தாலியின் வடக்கு பகுதிகளில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. மிலான் மற்றும் வெனிஸ் அருகே உள்ளே வெனிட்டா ஆகிய பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பு கடுமையாக உள்ளது.

இதனை ஒட்டி பல ஐரோப்பிய நாடுகளிலும் புதிதாக வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மத்திய கிழக்கில் வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக மாறியிருக்கும் ஈரான் நாட்டில் இதுவரை 26 பேர் உயிரிழந்து 141 பேருக்கு தொற்று பதியாவிகியுள்ளது. எனினும் நகரங்களை தனிமைப்படுத்தும் எந்தத் திட்டமும் இல்லை என்று ஈரான் அரசு புதன்கிழமை குறிப்பிட்டிருந்தது.

வைரஸ் பாதிப்பின் மையமாக இருக்கும் குவாம் நகருக்கு செல்ல வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டபோதும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான ஷியா முஸ்லிம்கள் வருகை தரும் அந்த நகரில் உள்ள மதத்தலம் மூடப்படவில்லை.

இதேவேளை ஜப்பானின் ஒசாக்கா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் அவ்வாறு பாதிக்கப்பட்ட முதல் நபர் அவராவர்.

கடந்த மாதம் கடைசியில் அவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. சிகிச்சையில் குணமாகி இம்மாதம் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அந்தப் பெண் தொண்டை அழற்சி, நெஞ்சு வலி ஆகியவற்றால் சிரமப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.

ஜப்பானில் இதுவரை 186 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் அச்சம் காரணமாக ஜப்பானில் தேசிய அளவில் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

“எல்லாவற்றையும் விட சிறுவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பையே அரசு கருத்தில்கொள்கிறது” என்று ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.

Fri, 02/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை