பாராளுமன்றம் - பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவுக்கு இடையில் ஒப்பந்தம்

ஆய்வு மற்றும் தகவல்களைத் திரட்டுதல்;

ஆய்வு மற்றும் தகவல்களைத் திரட்டுவது தொடர்பில் பாராளுமன்றத்துக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இந்நிகழ்வு (24) நடைபெற்றது. பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

கடந்த பத்து வருடங்களில் அரசாங்கப் பல்கலைக்கழகங்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆய்வு முடிவுகளை பாராளுமன்றத்தின் ஊடாக அணுகுவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கமைய ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருதடவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சகல அரச பல்கலைக்கழகங்களாலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆய்வு முடிவுகளை பாராளுமன்றத்துக்கு வழங்குவதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான ஆய்வுகளை பாராளுமன்ற ஆய்வுப் பிரிவின் ஊடாகப் பெற்றுக்கொள்ளவும் முடியும். அது மாத்திரமன்றி குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தகவல்கள் தேவைப்படுமாயின், பாராளுமன்ற ஆய்வுப் பிரிவின் ஊடாக சம்பந்தப்பட்ட துறைசார் பேராசிரியர்களைத் தொடர்புகொண்டு தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரிய, வரலாற்றில் முதற்தடவையாக இவ்வாறானதொரு முயற்சியைச் செய்யக் கிடைத்திருப்பது பெருமைக்குரியது எனக் குறிப்பிட்டார். தகவலறியும் சட்டம், சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தமை, கோப், கோபா உள்ளிட்ட குழுக்கள் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்பட்டதன் ஊடாக வீண் விரயங்கள் மற்றும் மோசடிகளைக் குறைக்க முடிந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். ஆய்வுகளைப் பெற்றுக்கொள்வதற்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பொதுமக்களின் பிரதிநிதிகள் சரியான முறையில் பயன்படுத்துவார்களென நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Wed, 02/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை