தென் கொரிய திரைப்படத்திற்கு சிறந்த படமாக ஒஸ்கார் விருது

இந்த ஆண்டின் ஒஸ்கார் விருது விழாவில் முதல்முறை ஆங்கில மொழியல்லாத தென் கொரியாவின் ‘பாராசைட்’ திரைப்படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் ஞாயிறுக்கிழமை நடைபெற்ற இந்த விருது நிகழ்வில் சாம் மெண்டசின் இயக்கத்தில் உருவான 1917 திரைப்படம் ஒஸ்கார் உச்ச விருதை வெல்லும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே தென் கொரிய திரைப்படம் அந்த விருதை தட்டிச் சென்றது.

சமூக நையாண்டித் திரைப்படாக உருவாக்கப்பட்ட பாராசைட் சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற பிரிவுகளிலும் விருது வென்றது.

ஏற்கனவே கேன்ஸ் உட்பட பல சர்வதேச விருதுகளை அள்ளிய பாராசைட் திரைப்படம் எது நடந்தாலும் கவலையில்லை என்ற மனநிலையைக் கொண்ட ஏழைக் குடும்பத்திற்கும், எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்யும் பெரும் பணக்காரக் குடும்பத்திற்கும் உள்ள முரண்பாட்டை சித்தரிக்கும் கதையை கொண்டதாகும்.

தென் கொரிய இயக்குநர் போங் ஜூன் ஹோவின் மற்றுமொரு வியக்கத்தக்க படைப்பு இது. பணம் ஒரு மனிதனின் நடத்தையையும் எண்ணத்தையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணியாக இருக்கிறது என்பதை அரசியல் பின்புலத்துடன் கூற முற்படுகிறது பாராசைட்.

படம் நெடுக குறியீடுகளுடன் தென் கொரியாவின் சமூகக் கட்டமைப்பை உதாரணமாக எடுத்துக் கொண்டு, பூமியெங்கும் உள்ள ஏழை மற்றும் பணக்காரர் என்ற பெரும் பிளவை சுட்டிக்காட்டுவதாக இந்தத் திரைப்படம் இருந்தது.

சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் படத்துக்காக நடிகர் வாக்கீன் பீனிக்ஸ் பெற்றதோடு ஜூடி திரைப்படத்தில் நடித்த ரெனீ செல்வெகர் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். முதலாவது உலகப் போரை கதைக் களமாகக் கொண்ட 1917 மூன்று விருதுகளை வென்றபோதும் அவை அனைத்தும் தொழில்நுட்பத்திற்கான விருதுகளாகவே இருந்தன.

Tue, 02/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை