புதிய வகை வண்டினம் தாக்கம்: மிளகு செய்கைக்கு அச்சுறுத்தல்

மிளகுச் செய்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வண்டினம் தொடர்பாக ஏற்றுமதி விவசாயத்துறை திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நோயினால் மிளகுக் கொடிகள் மிக விரைவில் வாடிவிடுவதுடன் பூச்சிகளின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது என்றும் இத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாத்தளையிலுள்ள மத்திய ஆய்வு நிலையத்தின்  தாவர நோயியல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரோஹன விஜேகோன் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களில் தற்போது இந்நோய் பதிவாகியுள்ளதாகவும் இதனை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராவிடில் நாடு முழுவதும் மிளகுச் செய்கை பெரும் சிக்கலுக்குள்ளாவதுடன் வண்டுகளின் தாக்கம் நாடு முழுதும் பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடும் மழையை அடுத்துவரும் கடும் வரட்சி காலத்துடன் மிளகுக் கொடிகளில் கறுப்பு நிறத்தில் தழும்புகள் உருவாவதுடன் இரண்டு அல்லது 3 வாரங்களில் கொடி பட்டுப் போகும் நிலை உருவாகும். மிளகுக் கொடிகளை பட்டுப்போக வைக்கும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வண்டினம் தொடர்பாக நாட்டில் பல பகுதிகளிலும் பதிவாகியுள்ளது. வண்டுகளின் தாக்கம் ஏற்பட்ட பின்னர் பட்டுப்போகும் மிளகுக் கொடிகளை சற்று தொலைவிலிருந்து பார்க்கும் போது காட்டுத்தீயினால் எரிந்துபோயுள்ள கொடிகள் போன்றே காட்சியளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நோய்த் தாக்கம் காரணமாக கருகிப் போயுள்ள மிளகுக் கொடிகளை பிடுங்கி எரித்துவிட வேண்டும். அத்துடன் பரிந்துரைக்கப்பட்டுள்ள கிருமிநாசினியை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Sat, 02/29/2020 - 05:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை