இணை அனுசரணையை வாபஸ் பெறும் இலங்கையின் நிலைப்பாடு இன்று அறிவிப்பு

மனித உரிமைகள் ஆணைக்குழு 43ஆவது அமர்வு

அமைச்சர் தினேஷ் நேற்று ஜெனீவா சென்றடைந்தார்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 43ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று மாலை ஜெனீவா சென்றடைந்தார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று(26) நடைபெறவுள்ள உயர் மட்ட மாநாட்டில் கலந்து கொள்ளும் அமைச்சர், இலங்கையின் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான 2019 மார்ச்சுக்கான 40/1 பிரேரணைக்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையையும் அதனுடன் இணைந்ததான 2015 ஒக்டோபருக்கான 30/1 பிரேரணை மற்றும் 2017 மார்ச் மாதத்துக்கான 34/1 பிரேரணை ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளும் என்பதை உத்தியோகபூர்வமாக முன்வைப்பாரென வெளிவிவகார அமைச்சு நேற்று தெரிவித்தது. அதனை தொடர்ந்து நாளை நடைபெறவுள்ள அமர்வில் உயர்ஸ்தானிகர் முன்வைக்கும் வாய்மூல கேள்விகளுக்கும் அமைச்சர் குணவர்தன விடையளிக்கவுள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அமைச்சர் தினேஷ் குணவர்தன மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பெச்லெட்டை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வெளிவிவகாரச் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, வெளிவிவகார அமைச்சின் ஐ.நா மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் எம்.ஆர்.கே லேனகல, சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கனிஷ்க பாலபட்டபெந்தி, பாதுகாப்பு அமைச்சின் பிரிகேடியர் ஈ.எஸ் ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் இணைப்புச் செயலாளர் சுபாஷ் சிறி விஜேதுங்க ஆகியோர் அமைச்சர் தலைமையில் ஜெனீவா அமர்வில் கலந்துகொள்வர்.

அமைச்சர் ஜெனீவாவிலுள்ள காலப்பகுதியில் ஐ.நா அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

Wed, 02/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை