பொதுஜன பெரமுன எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐ.தே.கவுடன் இணைந்து செயற்பட தயாரில்லை

பொதுஜன பெரமுன எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐ. தே. க. வுடன் இணைந்து செயற்படத் தயாரில்லை எனவும் எதிர்க்கட்சியினர் மக்கள் மத்தியில் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு சூழ்ச்சிகள் மூலம் அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கு முயற்சிப்பதாகவும்இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஒருபோதும் இடம்பெறப்போவதில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், எதிர்க்கட்சியினர் இவ்வாறு பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈஸ்டர் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் என சமூகத்தினால் இனங்காணப்பட்டுள்ள நபர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

மேற்படி கட்சிகள் கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் அமைத்ததை அனைவரும் அறிவர்.

இப்போதும் எதிர்வரும் தேர்தலின் பின்னர் சூழ்ச்சிகள் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதே அவர்களின் திட்டமாகவுள்ளது.

தற்போதுள்ள நிலையில் ஐ. தே. க. 50 ஆசனங்களைப் பெற்றக்கொண்டாலும் அது அவர்களுக்குப் பெரிய  வெற்றிதான். என்றாலும் கட்சிக்குள்ளே இருக்கின்ற பிரச்சினைகளைக் கூட இன்னும் அவர்களால் தீர்க்க முடியவில்லை.

ஒரு புறம் ரவூப் ஹக்கீம் எம் பி.இக் காலங்களில் தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே. வி. பி. யுடன் கூட்டணி அமைப்பதற்குத் தயாரெனக் கூறிவருகின்றார்.

அவர்கள் ஐ. தே. கட்சியின் சஜித் தரப்புடன் இணைந்து செயல்படத் தயாரெனக் கூறிவருகின்றனர். எனினும் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் வேறு விதமாகக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.

இது அவர்களது கட்சிக்குள்ளேயே நிலைமை மோசமாகியுள்ளது என்பதையே காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார். ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு அனுசரணை வழங்குவதிலிருந்து அரசாங்கம் விலகிக்கொள்ள தீர்மானித்துள்ள நிலையில் அதற்கு எதிராகச் செயற்பட்டு அதனைத் தடுப்பதற்கு அனுசரணை வழங்கும் அமைப்புக்கள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவை புலிகளுக்கு ஆதரவு வழங்கும் அமைப்புக்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பில் நேற்று பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த சௌ்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 02/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை