இறுதிப்போட்டிக்கு விம்பிள்டன் கழகம் தகுதி

புத்தளம் உதைபந்தாட்ட லீக் புத்தளத்தில் நடாத்தி வருகின்ற உதைபந்தாட்டதொடரின் இறுதிப்போட்டிக்கு புத்தளம் நகரின் மிகப்பழைமை வாய்ந்த விம்பிள்டன் கழகம் தகுதி பெற்றுள்ளது.

இத்தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் விம்பிள்டன் கழகம் புத்தளம் லிவர்பூல் கழகத்தினை வீழ்த்தி வெற்றி கொண்டதன் மூலமே இறுதிப்போட்டிக்கான தகுதியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் விம்பிள்டன் கழகம் ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள எருக்கலம்பிட்டி நாகவில்லு கழகத்தினை இறுதி போட்டியில் சந்திக்க உள்ளது. புத்தளம் நகர ரசிகர்களால் பெரிதும் ஏதிர்பார்க்கப்பட்ட இத்தொடருக்கான மேற்குறித்த இந்த இரண்டாவது அரை இறுதி ஆட்டம் சனிக்கிழமை (01) மாலை புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

முதல் பாதியின் ஐந்தாவது நிமிடத்தில் விம்பிள்டன் வீரர் சரண்ராஜ் தனது அணிக்கான முதலாவது கோலினை பெற்றார். தொடர்ந்து ஏழாவது நிமிடத்தில் விம்பிள்டனுக்கு கிடைக்கப்பெற்ற தண்டனை உதையினை அவ் அணி வீரர் சதாம் கோலாக மாற்றினார். இடைவேளையின் போது 02 : 00 கோல்களினால் விம்பிள்டன் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் 04 வது நிமிடத்தில் லிவர்பூல் அணி வீரர் ரஸ்வான் அதிரடியான கோலினை பெற்றதை தொடர்ந்து ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

போட்டி நிறைவு பெறும் வரைக்கும் இரு அணிகளுமே கோல்களை போட கடுமையாக போராடின. எனினும் நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளுமே மேலதிக கோல்களை பெறாததால் விம்பிள்டன் கழகம் 02 : 01 கோல்களினால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

போட்டிக்கு நடுவர்களாக எம்.ஆர்.எம். அம்ஜத், ஏ.ஏ.எம். கியாஸ், ஏ.ஓ.அஸாம், எம்.எஸ்.எம். அஸ்பான் ஆகியோர் கடமையாற்றினர்.

புத்தளம் தினகரன் நிருபர்

Fri, 02/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை