விமானக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வு

அமைச்சர் டக்ளஸ் அமைச்சரவைக்கு சிபாரிசு

யாழ்ப்பாணம் -சென்னைக்கிடையிலான விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் பரிசீலித்து நியாயமான முடிவொன்றை மேற்கொள்வதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கமைய நேற்று முன்தினம் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் விமானப் போக்குவரத்து அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே அதிகாரிகள் இதனை குறிப்பிட்டனர்.யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படுகின்ற சென்னை

விமான நிலையத்திற்கான விமானப் போக்குவரத்திற்காக பயணிகளிடமிருந்து பெருந்தொகையான விமான நிலைய வரி அறவிடப்படுகின்றமை தொடர்பாக கடந்த ஜனவரி 02ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்தில், கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு பயணங்களை மேற்கொள்வோருக்கான விமான நிலைய வரி 6,000 ரூபாவாக இருக்கின்ற போது யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் பயணிகளிடமிருந்து 12,000 ரூபா அறிவிடப்படுகின்றமையை யாழ். மக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற ஓரவஞ்சனையாகவே நோக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடிப்படை வசதிகள்கூட முழுமையாக நிறைவு செய்யப்படாத நிலையில் கடந்த ஆட்சியாளர்களினால் தேர்தலை நோக்கமாக கொண்டு யாழ்ப்பாணம் விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் கட்டுநாயக்கா விமான நிலையத்துடன் ஒப்பிடுகின்றபோது குறைந்த தூரத்தைக் கொண்ட யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளிடமிருந்து விமான நிலைய வரி இரண்டு மடங்காக அறவிடப்படுவதற்கு ஐ.தே.மு – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்த கூட்டரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு எதிரான இந்த தீர்மானமானது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை இவ் விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏகமனதாக தீர்மானித்தது.

 

Sat, 02/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை