சாடியோ மானேவின் கோலால் லிவர்பூலுக்கு மற்றொரு வெற்றி

சாடியோ மானேவின் பிந்திய நேர கோல் மூலம் ப்ரீமியர் லீக்கில் கடைசி இடத்தில் இருக்கும் நோர்விச் சிட்டிக்கு எதிராக 1–0 என வெற்றியீட்டிய லிவர்பூல் அணி தொடர்ச்சியாக மற்றொரு வெற்றியை பெற்றுக்கொண்டது.

இதன்மூலம் லிவர்பூல் அணி ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 25 புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி 30 ஆண்டுகளில் முதல் ப்ரீமியர் லீக் பட்டத்தை நெருங்கியுள்ளது. லிவர்பூல் தனது 35 ஆவது லீக் போட்டிகளில் பெறும் 34 ஆவது வெற்றி இதுவாகும்.

நோர்விச் சிட்டி அணியை விடவும் 55 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருக்கும் நிலையிலேயே லிவர்பூல் அந்த அணியை எதிர்கொண்டபோதும் எதிர்பார்த்த அளவு போட்டியில் ஆதிக்கம் செலுத்தவில்லை.

எதிரணி கோல் கம்பத்தை அடிக்கடி ஆக்கிரமித்தபோதும் லிவர்பூலால் கோல் பெறுவது கடும் ​போராட்டமாகவே இருந்தது. போட்டியின் ஒரு மணி நேரத்தை எட்டும்போது நபி கெயிட் நெருங்கிய தூரத்தில் பட்டுவந்த பந்தை கோலாக மாற்ற முயன்றபோது நோர்விச் சிட்டி கோல் காப்பாளர் டிம் க்ருல் அபாரமாகத் தடுத்தார். தொடர்ந்து மொஹமட் சலாஹ்வின் கோல் முயற்சியையும் தடுத்தார்.

இந்நிலையில் ஐரோப்பிய சம்பியனான லிவர்பூல் அணி சார்பில் 78 ஆவது நிமிடத்தில் சாடியோ மானே கோல் பெற்று வெற்றியை உறுதி செய்தார். செனகல் வீரரான மானே இங்கலாந்து கழகங்களுக்காக ஆடத் தொடங்கியதில் இருந்து அவர் பெறும் 100 ஆவது கோல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

லிவர்பூல் தற்போது 43 லீக் போட்டிகளில் தோல்வியுறாத அணியாக நீடிப்பதோடு, 49 போட்டிகளில் தோல்வியுறாத அணியாக சாதனை படைத்திருக்கும் ஆர்சனலை முறியடிக்க நெருங்கியுள்ளது.

Mon, 02/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை