இரத்தினக்கல் அகழ்வு கைத்தொழிலை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

உயர் தரத்திலான இரத்தினக்கல் வியாபார மத்திய நிலையத்தை உருவாக்க திட்டம்

இரத்தினபுரி மாவட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய இரத்தினக்கல் அகழ்வு கைத்தொழிலை ஊக்குவிப்பதற்கு நீண்டகால திட்டங்களை ஏற்படுத்தவுள்ளதாகவும், அதற்கான வேலைத்திட்டங்கள் அமைச்சரவை நிகழ்ச்சிநிரலில் இணைக்கப்பட்டு நிதி ஒதுக்கவுள்ளதாகவும் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட இரத்தினக்கல் வியாபாரிகள் மற்றும் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இரத்தினபுரியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பொலிஸாரின் தலையீடு இன்றி இரத்தினக்கல் அகழ்வு, மண் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். அதற்கமைய இரத்தினக்கல் கைத்தொழிலினை மீண்டும் பயனுள்ளதாக மாற்றியமைப்பதே ஜனாதிபதியின் எண்ணமாகும்.

இன்று வியாபாரிகளுக்கு இரத்தினக்கல் கைத்தொழில் நிலைபற்றிய சரியான வழிகாட்டல் இல்லை. எனவே இந்த நிலைமை எதிர்கால சந்ததியினருக்கு உருவாகாமல் இருக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். இரத்தினக்கல் கைத்தொழில் சம்பந்தமாக டிப்ளோமா பாடநெறியின் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். பேராதெனிய ,மொறட்டுவ தொழில்நுட்ப வித்தியாலயங்களில் இந்த பாடநெறியை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தெமுவாவன, நிவித்திகல மற்றும்ஹெரனியாவக ஆகிய இரத்தினக்கல் வியாபார நிலையங்கள் மூன்றையும் சகல வசதிகளையும் கொண்ட நவீன இடங்களாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய அமைச்சரவை நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்பட்டு சபை முதல்வருக்கு அறிவுரை வழங்கி உள்ளோம். இதனூடாக வெளிநாட்டு இரத்தினக்கல் வியாபாரிகளையும் நாட்டிற்கு வரவழைக்க சந்தர்ப்பம் கிடைக்கும். இத்திட்டத்துக்கான நிதி இந்த வருடத்தில் கிடைக்க உள்ளது.

இரத்தினக்கல் எதுவுமே கிடைக்காத நாடான ஹொங்கொங் நகரம் உலகத்தின் பிரதான இரத்தினக்கல் வியாபார மத்திய நிலையமாக உருவாகி உள்ளது. இதற்குக் காரணம் ஆபிரிக்காவில் கிடைக்கும் இரத்தினக்கல் ஆகும். எதிர்காலத்தில் நாமும் இதுதொடர்பாக உரிய கவனம் செலுத்த உள்ளோம். ஆபிரிக்காவில் கிடைக்கும் இரத்தினக் கற்களை எமது நாட்டிற்கு கொண்டுவர நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் எமக்கு உலகிலேயே உயர்ந்த நிலையில் உள்ள இரத்தினக்கல் வியாபார மத்திய நிலையமொன்றை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ- சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி- இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர- இரத்தினபுரி தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி பிரியந்த கருணாதிலக்க ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

(பலாங்கொடை தினகரன் நிருபர்)

Tue, 02/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை