அரசியல் ரீதியான சங்கங்களை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும்

"அரசியல் கட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொழில் சங்கங்களை உருவாக்கும் கலாசாரத்தை தவிர்த்து தொழில்சார் சங்கங்களை உருவாக்குவதில் ஆசிரியர்கள் அக்கறை செலுத்த வேண்டும்" என கல்வி,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய  கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தி விழா அல் - ஹிலால் மத்திய கல்லூரியின் அதிபர் எம் எஸ். எம். சஹீர் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு குறிப்பிட்டார் .

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று 100 தினங்களாகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலும் நாம் சிறந்த பாடசாலைக் கல்வியை வழங்குவதற்கான கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

ஆசிரியர்கள் தொழில் சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஆட்சியிலுள்ள எமது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் உரிய தீர்வை ஆசிரியர்களால் பெற்றுக் கொள்ளலாம் .

மாணவர்களின் கல்விசார் நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்வதற்கு ஆசிரியர்கள் முன்வர வேண்டும். எமது நாட்டின் ஒரு வருடத்திற்கான பாடசாலை கல்வி நேரத்தை நாம் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அபிவிருத்தியடைந்த நாடுகளில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக சுமார் 1,200 மணி நேரத்தை ஒதுக்கீடு செய்துள்ளனர்.

நாமும் எமது மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அல் - ஹிலால் மத்திய கல்லூரியை தேசிய பாடசாலைத் திட்டத்தில் உள் வாங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எமது அரசாங்கம் 1,000 பாடசாலைகளை தேசிய பாடசாலை திட்டத்தில் உள் வாங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதில் ஒரு பாடசாலையாக நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரியை தெரிவு செய்துள்ளோம் . கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான நிமல் லான்சா இதற்கான முன்மொழிவை என்னிடம் வழங்கியுள்ளார்.

இதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.

அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர்களான நிமல் லான்சா, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டொக்டர் சுதர்ஷனீ பெர்ணான்டோ புள்ளே, காவின்த ஜயவர்தன, பிரதி மேயர் எம்.ஏ.இஸட். பரீஸ் ஆகியோர் இவ் வைபவத்தில் கலந்து கொண்டனர்.

கல்விப் பணிப்பாளர்கள், கல்வி அதிகாரிகள், முன்னாள் அதிபர் எம்.எம்.எம்.றில்வான்,பிரதேச அரசியல்வாதிகள், பாடசாலை அதிபர்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களென பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

 நீர்கொழும்பு தினகரன் நிருபர்

Thu, 02/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை