மட்டக்களப்பில் என்னால் பல அபிவிருத்திகளை செய்ய முடிந்தது

மட்டக்களப்பு மாவட்டத்தில் என்னால் கடந்த காலங்களில் பல அபிவிருத்திகளைச் செய்ய முடிந்தது. அது காலத்திற்குக் காலம் வருகின்ற அரசாங்கங்களுடன் இணைந்து செயற்பட்டதனால் தான் என்னால் முடிந்தது. இல்லையேல் இவ்வாறான அபிவிருத்திகளை நினைத்துப்பார்த்திருக்க முடியாது. கட்சிபேதங்களின்றி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தலும் நான் அந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதுதான் எமது நோக்கம். இருந்தபோதிலும் நாங்கள் அபிவிருத்தியை மாத்திரம் இலக்காகக் கொண்டு செயற்பட முடியாது. இந்த நாட்டில் சுமார் 70 வருடங்களாக தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அகிம்சை வழியில் தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றவர்கள் தமிழ் மக்களுக்காகப் போராடியவர்கள் என இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணியின் தலைவர் சேமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர் முன்போக்கு முன்னணி எனும் புதிய அரசியல் கட்சியை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்று (02) அங்குரார்ப்பணம் செய்து உரையாற்றுகையிலே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

1956 ஆம் அண்டு பண்டா செல்வா ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டது. பின்னர் அப்போதிருந்த சிங்களக் கட்சிகளின் பலத்த எதிர்ப்பின் காரணமாக 1957 ஆம் ஆண்டு கிழித்தெறிப்பட்டது. பின்னர் 1985 ஆம் ஆண்டு பூட்டான் நாட்டில் திம்பு எனும் தலை நகரிலே ஒரு பேச்சுவார்த்தை இந்தியாவின் அனுசரணையில் நடைபெற்றது. அந்த பேச்சுவார்தை முறிவடைந்து அப்பேச்சுவார்தையின் கருத்துக்கள் நிறைவேற்றப்படவில்லை. இதுபோன்று வடக்கு ,கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று அவைகளனைத்தும் தோல்வியிலேதான் முடிவடைந்துள்ளன.

2002 ஆம் ஆண்டு நோர்வே ஒஸ்லோவிலே விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்திங்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதுவும் தோல்வியடைந்தது. இவ்வாறு பல தோல்விகளை தமிழ் மக்கள் சந்தித்தவர்கள்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பொறுத்தவரையில் மைற்கல்லாக குறிப்பிடப்படக்கூடியது ஜே.ஆர். ஜெயவர்தன கொண்டு வந்த 13 வது அரசியல் திருத்தச் சட்டம் மாகாண சபைகள் முறைமையாகும். அவ்வாறு வழங்கப்பட்ட அதிகாரங்கள்கூட தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதாக இல்லை.

வடக்கு கிழக்கிலே தமிழ் மக்கள் அவர்களை அவர்கள் ஆளக்கூடிய முறைமை அதில் இல்லை. மத்திய அரசியல் கட்டுப்பாட்டுக்குள்ளேதான் எல்லாம் அமைந்துள்ளது. எனவே 13 வது திருத்தச் சட்டத்திற்குள்ளே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை இது வேதனைக்குரிய விடையமாகும்.

13 திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்ட விடையங்களுடன் சேர்த்து இன்னும் சில விடையங்களையும் வழங்கினால் வடக்கு கிழக்கில் ஓரளவு நிருவாகத்தை முன்கொண்டு செல்லலாம். அதுகூட நிறைவேறவில்லை. இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை மிக முக்கியமானதாகும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக கடந்த அரசாங்கம் அரசியல் நிருணய சபை ஒன்றையும் நியமித்திருந்தது. அந்த சபை எடுத்து முயற்சிகள் அனைத்தும் தேல்வியில் முடிந்தன. தமிழ் மக்கள் அரசியலில் தேல்வியைத்தான் அதிகம் சந்தித்துள்ளார்கள். அபிவிருதியை மாத்திரம் வைத்துக் கொண்டு செயற்பட முடியாது என அவர் இதன்பேது தெரிவித்தார்.

பெரியபோரதீவு தினகரன் நிருபர்

Mon, 02/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை