கூட்டமைப்பு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நோக்கில் பயணிக்கிறது

கோடீஸ்வரன் எம்.பி

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நோக்கில் பயணித்துக் கொண்டு அதற்கு சமாந்தரமான மக்களின் அபிவிருத்திகளையும் முன்னெடுத்து செல்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் கோரைக்களப்பு சக்தி வித்தியாலயத்தின் வருடார்ந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்து இருந்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வங்குறோத்து அரசியலை நடாத்தும் ஒருசிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிப்பதே அவர்களின் அரசியல் வாழ்கை.

தமிழ் மக்கள் தங்களின் உயிரோட்டம் தமிழாகவும் தமிழ் தேசிய உணர்வாகவும் இருக்க வேண்டும். செம்மொழியான தமிழை சிறப்பாக கற்றுக் கொண்டு அதனை தொடர்ந்து வளர்த்து பாதுகாக்கின்ற சமூகமாக தமிழ் சமூகம் வாழ வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வெறுமனே உரிமையை கேட்டு போராடுவதோடு நின்றுவிடவில்லை, இன்று திருக்கோவில் பிரதேசத்தில் 40 கோடிக்கும் மேலான நிதிகளை செலவிட்டு பல்வேறு பாரிய அபிவிருத்திப் பணிகளை நான் முன்னெடுத்து இருக்கின்றேன்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றத்திலும் வெளிநாடுகளிலும் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைகளை கொண்டு சென்று நிரந்தர தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றோம்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் இருப்பைப் பாதுகாக்க வேண்டும் இதற்கு ஒவ்வொரு தமிழ் மகனும் பாடுபட வேண்டும். இதற்கான உங்களுடன் தொடர்ந்தும் பயணிக்க நான் தயாராகவே இருக்கின்றேன் என்றார்.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(திருக்கோவில் தினகரன் நிருபர்-)

Mon, 02/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை