வெளிநாட்டு உம்ரா யாத்திரிகர்களுக்கு சவூதி அரேபியா இடைக்காலத் தடை

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக இஸ்லாத்தின் புனிதத் தலத்திற்கான உம்ரா யாத்திரைக்கு விசா வழங்குவதை சவூதி அரேபியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. இதனை ஒட்டி வரும் ஜூலையில் ஆரம்பமாகும் ஹஜ் யாத்திரைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான யாத்திரிகர்களை வரவேற்கும் சவூதி அரேபியா, கொரோனா வைரஸ் பாதிப்புற்ற நாடுகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதையும் இடைநிறுத்துவதாக நேற்று அறிவித்தது.

சவூதி அரேபியாவில் இதுவரை எவரும் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படாதபோதும் அண்டை நாடுகளில் இது பரவி இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைநிறுத்தம் தற்காலிகமானது தான் என்று அந்த நாடு குறிப்பிட்டுள்ளது. எனினும் அது தளர்த்தப்படும் காலவரையறை பற்றிய எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.

“பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு சவூதி அரசு தீர்மானித்துள்ளது: உம்ரா மற்றும் இறைத்தூதரின் பள்ளிவாசலுக்கு பயணிக்கும் நோக்கில் வருபவர்களுக்கான நுழைவு தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்” என்று சவூதி வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“ஆபத்தான புதிய கொரோனா (கொவிட்–19) பரவிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கான சுற்றுலா விசாவும் இடைநிறுத்தப்படுகிறது” என்று அது குறிப்பிட்டுள்ளது.

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் வளைகுடா நாடுகளில் விமானப் பயணங்கள் இடைநிறுத்தம், பாடசாலைகள் பூட்டு உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2 மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் பங்கேற்கும் ஹஜ் கடமை ஆரம்பமாகவிருக்கும் நிலையிலேயே சவூதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எனினும் வசதி படைத்த அனைத்து முஸ்லிம்களும் வாழ்நாளில் ஒரு தடவை செய்ய வேண்டிய கடமையான ஹஜ்ஜை ஒட்டி நோய்த் தொற்று குறித்து அதிக அவதானம் செலுத்தப்படுகிறது.

632 இல் ஹஜ் கடமையில் மலேரியா நோய் பரவியது குறித்த சம்பவமே வரலாற்றில் பதிவான முதல் நிகழ்வாக உள்ளது. 1821 இல் ஏற்பட்ட வாந்திபேதி நோயினால் சுமார் 20,000 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளனர். 1865 இல் ஏற்பட்ட மற்றொரு வாந்திபேதி நோய் பாதிப்பினால் 15,000 யாத்திரிகர்கள் உயிரிழந்தது மட்டுமன்றி அந்த நோய் உலகெங்கும் பரவியது.

மிக அண்மையில் மற்றொரு கொரோனா வைரஸ் தொற்றான மேர்ஸ் பாதிப்பை ஒட்டி சவூதி கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் நாட்டில் 26 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். வளைகுடா நாடுகளான குவைட் மற்றும் பஹ்ரைனிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Fri, 02/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை