ஒற்றை தேசமாக நாட்டை கட்டியெழுப்ப ஐ.ச.கூ தயார்

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதியுடனும் எதிர்வரும் தேர்தலில் பெரும்பான்மை மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் சிறுபான்மை மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் இணைந்து எமது நாட்டை ஒற்றை தேசமாக கட்டியெழுப்ப தயாராகவிருப்பதாக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.

பூகோள அரசியல் ரீதியில் தங்களது நலன்களை பாதுகாத்துக்கொள்ள முனைகின்ற அரசியல்வாதிகளின் கனவை நனவாக்கவிடாமல் இந்த நாட்டில் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ சிறுபான்மை உறுப்பினர்களான நாங்கள் பங்களிப்புச் செய்வோம் எனவும் குறிப்பிட்டார்.

‘சப்பிரி கம’ திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கூறுகையில்,

இன்று லிபியா, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் யெமன் போன்ற இஸ்லாமிய நாடுகள் சதித்திட்டத்திற்கு அடிபணிந்து அரசியல் பிரச்சினையினால் அழிந்துபோகின்றதை அவதானிக்கிறோம். இதன் விளைவாக உலகநாடுகளில் 59 பில்லியன் முஸ்லிம்கள் அகதிகளாகியுள்ளனர். பல இலட்சம் முஸ்லிம்கள் உயிரிழந்துள்னர்.

ஆனால் இதைப்பற்றி எவரும் இன்று பேசாமல் முஸ்லிம் பெண்கள் முக்காடு போடுவதா? இல்லையா? என்ற அடிப்படையில் முஸ்லிம்களின் அரசியல் பெண்களைச் சுற்றி வட்டம்போட்டு விவாதிப்பதும் ஏனைய சமூகங்களில் இடருகின்ற விடயங்கைள தூக்கிப்பிடித்து பேசுகின்ற அளவிலும் நிற்கிறது. எனவே சமூக மாற்ற வேண்டும்.

தேர்தல் காலம் வந்துவிட்டால் தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கு ஏசுவதும் முஸ்லிம் அரசியல் வாதிகள் தமிழர்களுக்கு ஏசுவதும் வழக்கமாகிவிட்டது. இந்நிலையை மாற்றுவதற்காக கடந்த முப்பது வருடங்கள் நான் பணியாற்றியிருக்கின்றேன். ஆனால் முடியவில்லை. ஆகவே இதற்கு முத்தாய்ப்பாக அடுத்த ஐந்து வருடங்கள் எனது அரசியல் மிகத்தீவிரமாக இருக்கும் என்றார்.

ஏறாவூர் குறூப் நிருபர்

Sat, 02/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை