வழங்கிய வாக்குறுதிகளை ஐந்து வருடங்களில் முழுமையாக நிறைவேற்றுவோம்

பலமான அரசை உருவாக்க ஆதரவு வழங்குங்கள்

பலமான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு எதிர்வரும் தேர்தலில் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

கண்டி கலஹாவில் நேற்று நடைபெற்ற தேசிய நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். பெருந்திரளான மக்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, கடந்த தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் எதிர்வரும் ஐந்து வருடங்களில் நிறைவேற்றவுள்ளதாகவும்  அவர் உறுதியளித்தார். 

நாட்டு மக்கள் தம் மீது நம்பிக்கை வைத்து கடந்த தேர்தலில் பெரும் வெற்றியை தந்ததைப் போன்று எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் மீண்டும் தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென்றும்  கேட்டுக் கொண்டார். 

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சமான நோக்கு கருத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டம் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறப்பு அதிதியாக கலந்து கொண்டதுடன் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அளுத்கமகே,பிரதி அமைச்சர் லொஹான் ரத்வத்த உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்படி வீதி அபிவிருத்தித் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் நாட்டின் நிர்வாக முறை பலமிழக்கச் செய்யப்பட்டுள்ளது. பிரதமருக்கும் பாராளுமன்றத்திற்குமுள்ள அதிகாரம் பலவீனப் படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் நாட்டில் பலமான அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 

அரச அதிகாரிகள் தமது அதிகாரங்களை அச்சமின்றி முழுமையாக உபயோகித்து மக்களுக்கான சேவையை பெற்றுக் கொடுப்பதற்காக அவர்களுக்கான அதிகாரத்தை நாம் வழங்கியுள்ளோம். 

தேசிய, சர்வதேச ரீதியிலான முதலீடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்போது முழு உலகமும் எமது நாட்டின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது.நாட்டின் மீதான நம்பிக்கையை நாம் மீள கட்டியெழுப்பியுள்ளோம். இந்தியா, சீனா உட்பட மேற்கத்திய நாடுகள் எம்முடன் பெரும் நம்பிக்கையுடன் செயல்படுகின்றன. 

முதலீட்டு நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. கடந்த மூன்று மாதங்களில் பாரிய முதலீடுகளை எம்மால் ஆரம்பிக்க முடிந்துள்ளது. 

ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதால் எமது வாக்குறுதியும் நிறைவேறுகிறது. இத்திட்டத்தை கண்டி மாவட்டத்தில் ஆரம்பித்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 

கடந்த 2005 - 2014 காலகட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் பெரும் அபிவிருத்திகள் நடைபெற்றன. பல நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. அந்த அமைச்சின் செயலாளர் பெரும் அர்ப்பணிப்புடன் அதற்காக செயற்பட்டார். தற்போது அவரே செயலாளராக செயல்பட்டு சிறந்த செயல்திட்டங்கள் முன்னெடுக்கப் படுகின்றன. 

கலஹாவிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்  

Thu, 02/20/2020 - 11:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை