‘கிராமத்துக்கு ஒரு வீடு’ நாடு முழுவதும் இன்று ஆரம்பம்

நாட்டிலுள்ள 14,022கிராம சேவகர் பிரிவுகளிலும் ஒவ்வொரு வீட்டை அமைக்கும் ‘கிராமத்துக்கு ஒரு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ வேலைத்திட்டம் இன்று நாடுமுழுவதும் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. 

அனைத்து வீடுகளும் பயனாளிகளுக்கு இலவசமாகவே வழங்கப்படும் என்பதுடன், ஒவ்வொரு வீடும் ரூபா 6இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்படும். இதன் ஆரம்ப நிகழ்வு குருணாகல் மாவட்டத்தின் கிரிபாவ கிராமத்தில் சுபவேளையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறுகிறது. அதேநேரம் நாட்டில் உள்ள 160தேர்தல் தொகுதியிலும் வீடுகளை அமைப்பதற்காக அடிக்கல் இன்று நாட்டப்படும் என வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மூலம் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இயங்கும் ஒன்றிணைந்த நிறுவனங்களின் உதவிகளும் இதற்காகப் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. 14,022வீடுகளையும் அமைப்பதற்கு ரூபா 8,400மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து வீடுகளும் இவ்வருட இறுதிக்குள் செய்து முடிக்கப்படும். 

இதற்கான நிதியானது ஏற்கனவே தேசிய வீடமைப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், அரச செலவீணங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் சேமிக்கப்பட்டுள்ள நிதியும் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு வருடமும் இத் திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

வீடுகளின் கூரைகள் ஓடுகள் மூலமே அமைக்கப்படும். தேசிய கைத்தொழிலை ஊக்குவிக்கும் முகமாக ஓடுகள் மூலம் வீட்டுக் கூரைகளை அமைக்குமாறு பிரதமரே பணித்துள்ளார். அத்துடன், எதிர் காலத்தில் இத் திட்டம் நடுத்தர மக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வீடுகளை அமைத்துக்கொள்ள முடியாதவர்களுக்கும் கடன்முறைமையில் அமுல்படுத்தப்படும். 

இதேவேளை, கடந்த காலத்தில் இலவசமாக மக்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. 6இலட்சம் வரை கடன் அறவீட்டில் தான் வீடுகள் அமைக்கப்பட்டன. ஆனால், அதனை பிரசாரம் செய்வதற்காக 1,000மில்லியன் வரையான நிதி செலவிடப்பட்டுள்ளது. நாம் அனைத்து வீடுகளையும் பயனாளிகளுக்கு இலவசமாகவே வழங்கவுள்ளோம். 

கடந்த காலத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் எவ்வித முகாமைத்துவமும் இருக்கவில்லை. வறுமையானவர்களுக்கு வீடுகளை அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பாலங்களையும், குளங்களையும் அமைத்துள்ளதுடன், விகாரைகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளனர். 

அளவுக்கு அதிகமான பணியாளர்களும் அதிகாரசபைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமான நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அதிகளவான நிதியை வீணாக செலவழிக்க வேண்டியுள்ளது. 

கடந்த நான்கரை வருடத்தில் 7,000 வீடுகள் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5,000ற்கும் குறைவான வீடுகளே முழுமைப்படுத்தப்பட்ட வீடுகளாகும். நாம் அமைக்கும் வீடுகள் முழுமைப்படுத்தப்பட்டவையாக இருக்கும் என்பதுடன், சுற்றுச்சூழலுக்கு பாதகமில்லாது அமைக்கப்படும் என்றார்.

சுப்பிரமணியம் நிசாந்தன் 

Sat, 02/01/2020 - 09:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை