ரணிலை போன்றே சஜித்திற்கும் தேர்தலுக்கு முகம்கொடுக்க அச்சம்

ரணில் விக்கிரசிங்கவைபோன்றே சஜித் பிரேமதாசவும் தேர்தல்களுக்கு முகங்கொடுக்க அஞ்சுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த தருணத்தில் தேர்தல்களுக்கு அஞ்சியது போன்று எதிர்க்கட்சியில் உள்ளபோதும் தேர்தல்களை கண்டு அச்சமடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

அரசாங்கத்திடமிருந்து எப்படியேனும் தேர்தலொன்றை பெற்றுக்கொள்வதே எதிர்க்கட்சியின் செயற்பாடாக இருக்கும். நாம் எதிர்க்கட்சியில் இருந்த தருணத்திலும் தற்போதும் தேர்தல்களை எதிர்கொள்ள தயாராகவே இருந்தோம். அரசாங்கத்திலிருந்த காலத்தில் உரிய காலத்துக்கு முன்பே தேர்தலை நடத்தியிருந்தோம். என்றாலும் கடந்த ஐந்து வருட ஐ.தே.க ஆட்சியில் இயலுமானவரை தேர்தல்கள் பிற்போடப்பட்டன.

அன்று தேர்தல்களை சந்திக்க ரணில் விக்கிரமசிங்க அஞ்சியது போன்று இன்று சஜித் பிரேமதாசவும் தேர்தல்களை கண்டு அச்சமடைந்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளில் திருப்தியில்லையென்றால் பாராளுமன்றத்தை கலைக்கும் யோசனையை நாளை கொண்டுவந்தாலும் ஆதரவளிக்க நாம் தயாராக உள்ளோம்.

பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொடுத்தால் ஊழல்கள் அதிகரித்துவிடுமென எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர். பாரிய ஊழல் மோசடிகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாத கடந்த அரசாங்கத்தில்தான் இடம்பெற்றன. பிணைமுறி மோசடி, மத்திய கலாசார நிதியத்தில் மோசடி என அனைத்தும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனேயே நடைபெற்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் புதிய வாகனக் கொள்வனவுகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளதுடன், அந்நிதியில் மக்களுக்கு அபிவிருத்திகளை முன்னெடுக்கிறது. ஆனால், கடந்த அரசாங்கத்தில் வாகனக் கொள்வனவுக்காக பாரிய நிதி செலவிடப்பட்டது என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 02/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை