சீனாவின் ஆய்வு அறிக்கை வெளியானது: முதியோர், நோயுற்றவர்களுக்கே ஆபத்து

கொவிட்–19 வைரஸ் தொற்று:

கொவிட்–19 வைரஸ் தொற்று ஏற்பட்ட 44,000க்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ விபரங்களை சீன சுகாதார அதிகாரிகள் முதல்முறை வெளியிட்டுள்ளனர். இந்த நோய் வெளிப்பட்டதில் இருந்து வெளியிடப்பட்ட மிகப்பெரிய ஆய்வு அறிக்கையாக இது உள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மத்திய நிலையத்தின் இந்த தரவுகளின்படி, நோய் தொற்றின் 80 வீதமானது காய்ச்சலுடன் சிறு அளவான பாதிப்பையே ஏற்படுத்தி இருப்பதோடு வயது முதிர்ந்தவர்களே ஆபத்தை சந்திக்கின்றனர்.

மருத்துவப் பணியாளர்களும் அதிக அச்சுறுத்தலுக்கு முகம்கொடுப்பதாகவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

வூஹான் நகரில் மருத்துவமனை ஒன்றில் பணிப்பாளர் ஒருவரும் இந்த வைரஸினால் நேற்று உயிரிழந்துள்ளார்.

புதிய கொரோனா வைரஸின் மையப்புள்ளியாக மாறியிருக்கும் இந்த நகரில் உள்ள பிரதான மருத்துமனை ஒன்றான வூச்சான் மருத்துவமனையின் பணிப்பாளரான 51 வயதான லியு சிமிங் என்பவரே உயிரிழந்துள்ளார். இதுவரை வைரஸினால் உயிரிழந்த மூத்த சுகாதார அதிகாரியாக இவர் உள்ளார்.

வூஹானைத் தலைநகராகக் கொண்ட ஹுபெய் மாகாணமே சீனாவில் கொரோனா வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்ட பிராந்தியமாகும். நாட்டின் ஏனைய பகுதிகளில் உயிரிழப்பு வீதம் 0.4 ஆக இருக்கும் நிலையில் இந்த மாகாணத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்களில் 2.9 வீதத்தினர் உயிரிழப்பதாக நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்புக்கான சீன மத்திய நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தரவுகளின்படி கொவிட்–19 வைரஸினால் ஒட்டுமொத்த உயிரிழப்பு வீதம் 2.3 ஆக பதிவாகியுள்ளது. சீனாவின புதிய உத்தியோகபூர்வ எண்ணிக்கையின்படி நேற்றுடன் இந்த வைரஸினால் 1,868 பேர் உயிரிழந்திருப்பதோடு 72,436 பேருக்கு நோய் தொற்றியுள்ளது.

கடந்த ஒரு தினத்தில் மேலும் 98 பேர் உயிரிழந்திருப்பதோடு 1,886 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 93 உயிரிழப்புகள் மற்றும் 1,807 நோய் பாதிப்புகள் ஹுபெய் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளது. இதுவரை 12,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்திருப்பதாக சீன நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மத்திய நிலையத்தின் ஆவணம் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டதோடு அதனை சீனாவின் நோய்த்தொற்று அறிவியல் இதில் பிரசுரித்தது. இதில் கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி தொடக்கம் சீனாவில் கொவிட்–19 தொற்றியவர்கள் என்று உறுதி செய்யப்பட்ட 44,000க்கும் அதிகமான சம்பவங்கள் தொடர்பில் அவதானிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த வைரஸ் தாக்கத்தின் போக்கு மற்றும் வடிவம் பற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவெங்கும் உறுதி செய்யப்பட்ட 44,672 நோய் பாதிப்பு சம்பவங்களின் விரிவான விபரங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன்படி நோய் தொற்றின் 80.9 வீதமானது சிறு பாதிப்புக் கொண்டது என்றும் 13.8 வீதமானது கடுமையானது என்றும் அடையாளம் காணப்பட்டிருப்பதோடு 4.7 வீதமானதே உயிராபத்து கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. நோய் பாதிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக இருப்பதோடு 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அதிகரித்துள்ளது.

பாலின அடிப்படையில் பெண்களை விடவும் (1.7 வீதம்) ஆண்களே (2.8 வீதம்) அதிகம் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கனவே எந்த நோய் பாதிப்பு உள்ளர்களுக்கு இந்த வைரஸ் உயிராபத்தை ஏற்படுத்துகிறது என்ற விபரமும் இந்த ஆய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் இதய நோய்கள் முதலிடத்தை பெறுவதோடு அதனைத் தொடர்ந்து நீரிழிவு, நாள்பட்ட சுவாச நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

மருத்துவப் பணியாளர்களிடையே இந்த நோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகமாக இருப்பதோடு இவ்வாறு 3,019 சுகாதாரப் பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1,716 சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் கடைசி நாளான கடந்த பெப்ரவரி 11 வரை ஐந்து மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நகரங்களை முடக்கியும் பயணங்கள் மற்றும் நடமாட்டங்களை கட்டுப்படுத்தியும் சீனா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது அந்நாட்டில் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

சீன பெருநிலத்திற்கு வெளியில் 26 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 827 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

Wed, 02/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை