மஹிந்த - மைத்திரி நாளை சந்திப்பு

சு.க− பொ.பெரமுன கூட்டணி குறித்து ஆராய ஏற்பாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வுகாணும் முகமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாட முடிவுசெய்துள்ளனர். இச்சந்திப்பு நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளதாக சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

இதன்போது பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து மோதல்களுக்கு தீர்வு காண்பது குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் பொதுத் தேர்தலில் பலமான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பிலும் ஆழமாக ஆராயப்படுமெனவும் சு.கவின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்குவதற்காக பொதுஜன பெரமுனவுடன் சு.க உடன்படிக்கையொன்றை செய்துக்கொண்டது. குறித்த உடன்படிக்கையில் பொதுத் தேர்தலில் பரந்துபட்ட கூட்டணியொன்று அமைக்கவும் கதிரை சின்னத்தில் தேர்தலை சந்திக்கவும் இணக்கம் காணப்பட்டிருந்தது. இதனை இருதரப்பினரும் கூட்டாகவும் அறிவித்திருந்தனர். என்றாலும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இரு கட்சிகளுக்கும் இடையில் கருத்து மோதல்கள் உக்கிரகட்டத்தை எட்டியுள்ளன. பொதுத் தேர்தலில் மொட்டு சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதோடு சு.க தனித்து போட்டியிட்டு பின்னர் தங்களுடன் இணைய வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 02/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை