சீனாவின் கொரோனா வைரஸுக்கு உத்தியோகபூர்வ பெயர் அறிவிப்பு

உயிரிழப்பு 1,115 ஆக அதிகரிப்பு

கோவிட்–19

நோய்த் தொற்றை ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸுக்கு உலக சுகாதார அமைப்பு ‘கோவிட்–19’ என்று உத்தியோகபூர்வமாக பெயர் சூட்டியுள்ளது.

“இந்த நோய்க்கு புதிய பெயர் சூட்டி இருக்கிறோம், அது கோவிட்–19” என்று உலக சுயாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஒரு குழுவைச் சார்ந்தோ, நாட்டைச் சார்ந்தோ வைரஸ் வகைப்படுத்தப்படக்கூடாது என்பதால், அதற்குப் புதிய பொதுப் பெயர் வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தினர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வைரஸ் தொற்று பற்றி உலக சுகாதார அமைப்புக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஆங்கிலத்தில் ‘கொரோனா’, ‘வைரஸ்’ மற்றும் ‘டிசீஸ்’ ஆகிய மூன்று வார்த்தைகளின் அடிப்படையிலும், சென்ற ஆண்டைக் குறிக்கும் வகையிலும் வைரஸுக்கு கோவிட்–19 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த வைரஸினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,115 ஆக அதிகரித்துள்ளது. சீன பெருநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் நோய் தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44,653 ஆக அதிகரித்துள்ளது. இதில் கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக 2,015 பேருக்கு வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நாளொன்றில் புதிதாக நோய் தோற்றுவோர் எண்ணிக்கை வீழ்ச்சியாகும்.

இதேவேளை புதிய கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டி.பி.எஸ் வங்கியில் இருந்து சுமார் 300 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

43 ஆவது மாடியில் பணியாற்றிய 300 ஊழியர்களுமே நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட அனைத்து ஊழியர்களும் அவர்களது வீட்டிலிருந்து வேலை செய்ய, வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதாக டி.பி.எஸ் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட ஊழியருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வேண்டிய உதவிகள் செய்துதரப்படும் என்று அது கூறியது.

அலுவலகத்தில் உள்ள பொது இடங்களும் மின்தூக்கிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக டி.பி.எஸ் தெரிவித்தது.

முன்னதாக சிங்கப்பூரில் 47 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு சீனாவுக்கு வெளியில் இதுவே அதிக எண்ணிக்கையாகும். சீனாவுக்கு வெளியில் 20க்கும் அதிகமான நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் தொற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மறுபுறம் ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் மேலும் 39 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அவர்களையும் சேர்த்து, அந்தக் கப்பலில் 174 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரில் நால்வர் மோசமான நிலையில் உள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஹொங்கொங்கில் இறங்கிய கப்பல் பயணிக்கு வைரஸ் தொற்றியது.

அதனால், கப்பல் கடந்த வாரத்திலிருந்து ஜப்பான் கரையோரத்தில் தனிமைப்படுத்தப்பட்டது. வரும் 19ஆம் திகதி வரை அந்தக் கப்பல் தனிமைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புதிய கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக முறியடித்து வெற்றி காண முடியும் என்று சீன ஜனாதிபதி ஷி சின்பிங் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவுடன் தொலைபேசியில் பேசியபோது அவர் அவ்வாறு கூறினார். சீனா நிர்ணயித்துள்ள பொருளாதார, சமூக முன்னேற்றத்தை அடைய முடியும் என்றும் ஷி குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டான சூழலில், இந்தோனேசியாவின் புரிந்துணர்வையும், நம்பிக்கையையும் சீன ஜனாதிபதி பாராட்டினார்.

சீனாவுக்கு மருத்துவப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளதை இந்தோனேசிய ஜனாதிபதி விடோடோ சுட்டிக்காட்டினார். தேவைப்பட்டால், இன்னும் அதிகமான உதவிகளைச் செய்யத் தயாராயிருப்பதாகவும் அவர் கூறினார்.

Thu, 02/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை