டிரம்பின் அமைதித் திட்டத்தால் இஸ்ரேல்–பலஸ்தீனத்தில் பதற்றம்

ஜெரூசலத்தில் காரை மோதவிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 12 இஸ்ரேலிய படையினர் மற்றும் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு அமைதித் திட்டத்திற்கு பதில் அளிக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸ் அறிவித்துள்ளது.

பிறிதொரு சம்பவத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏற்பட்ட மோதலின்போது இஸ்ரேலிய துருப்புகளால் பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பலஸ்தீனர்களின் கிழக்கு ஜெரூசத்திற்கு அருகாமையில் உள்ள டேவிட் ரெமஸ் வீதியிலேயே கார் வண்டி மோதவிடப்பட்டுள்ளது. இங்கு இரவு விடுதிகள், மதுபான கடைகளும் உள்ளன.

படையினர் தமது பயிற்சியை முடித்து நகரில் சுற்றிக்கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இராணுவ பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதில் ஒருவர் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்ற தாக்குதல்தாரியை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தேடிவருகின்றனர்.

இதேவளை இஸ்ரேலிய படையினர் மீது கற்களை வீசியதாகக் கூறி மேற்குக் கரையில் ஜெனின் நகரைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு யூதக் குடியேறி ஒருவரை கொலை செய்ததுடன் தொடர்புடைய பலஸ்தீனர் ஒருவரின் வீட்டை இடிக்க இஸ்ரேலிய இராணுவம் முயன்றபோதே அங்குள்ள பலஸ்தீனர்களுடன் மோதல் வெடித்துள்ளது.

மேற்குக் கரை நகரான ஹெப்ரோனில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் இஸ்ரேல் படையினரால் 17 வயது பலஸ்தீனர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மறுபுறம் இஸ்ரேல் நேற்று காசாவில் ஹமாஸ் நிலைகள் மீது வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டு தாக்குதல் மற்றும் எரியும் பலூன்கள் பறக்கவிடப்பட்டதை அடுத்தே இந்த வான் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

டிரம்பின் அமைதித் திட்டம் வெளியானது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. டிரம்பின் இந்தத் திட்டத்தை பலஸ்தீனர்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்.

Fri, 02/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை