வரக்காபொலை பாபுல் ஹசன் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

வரக்காபொலை பாபுல் ஹசன் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி எம்.ஐ.நஸீரா தலைமையில் இடம்பெற்ற இறுதிநாள் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சரும் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சியம்பலாபிடிய பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதியாக கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டதரணி எச்.ஆர். சாரதி துஷ்மந்த உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தாமரை, மல்லிகை, ரோஜா ஆகிய 3 இல்லங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் தாமரை இல்லம் 518 புள்ளிகளை பெற்று வெற்றியீட்டியதுடன், மல்லிகை இல்லம் 480 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும் ரோஜா இல்லம் 381 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று கொண்டது.

1944ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி 75 ஆண்டுகளை பூர்த்தி செய்கின்றது. வரக்காபொலை பகுதி பிரபல கொடை வல்லலும் கல்எலிய முஸ்லிம் அரபு மகளிர் கல்லூரியின் ஸ்தாபகருமான மர்ஹூம் எம்.ஏ.எம். அபுஹசன் ஹாஜியாருக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டு இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

இப்பாடசாலை முன்னாள் கல்வியமைச்சர் காயிதே மில்லத் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் காலத்தில் இப்பாடசாலை மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டு பின்னர் முன்னாள் கல்வியமைச்சர் நிஸ்ஸங்க விஜயரட்னவின் காலத்தில் மத்திய கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது.

ஆரம்ப பிரிவு முதல் உயர்தரம் வரை கல்வி போதிக்கப்படும் இக்கல்லூரி பல துறைகளில் துரித வளர்ச்சி கண்டு வருகின்றது. இப்பாடசாலை சமூகம் கல்வி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடியவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய அரசாங்கத்தின் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு இதனை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தி தருவதாக அவர் அங்கு உறுதியளித்தார். கல்வி, கலை, கலாசாரம் விளையாட்டு துறைகளில் சாதனை படைத்து வரும் இக்கல்லூரி மாணவர்கள் 2019ம் ஆண்டு 12 வயதின் கீழ் மைலோ கிண்ண கால்பந்து போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்தனர். சாதனைப் படைத்த மாணவர்கள் விளையாட்டு போட்டியின் இறுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய உள்ளிட்ட அதிதிகளினால் கிண்ணங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வரக்காபொலை தினகரன் நிருபர்

Thu, 02/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை