மஹாநாம அனைவருக்கும் முன் மாதிரி வீரர்

உலகின் மிகப் பழைமையான இடைவிடாது தொடர்ந்து விளையாடப்பட்டு வரும் பாடசாலைகளுக்கிடையிலான ரோயல்- – தோமியன் பாரிய கிரிக்கெட் போட்டி நடைபெற இன்னும் மூன்று வாரங்களே உள்ளன.

ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் விருது வழங்கல் நிகழ்ச்சி இந்த சமயத்தில்தான் சூடு பிடிப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சிக்கும் மேலதிகமாக தற்போது சிறந்த பாடசாலை வீராங்கனை விருதும் சேர்ந்து கொண்டுள்ளது. இப்போதைய ஒப்சேர்வர் பாடசாலை வீரர் விருது வழங்கல் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.

பாடசாலைகளுக்கிடையிலான பாரிய சமர் கிரிக்கெட் போட்டிகள் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கவுள்ளன. பாடசாலைகளின் பாரிய சமர் கிரிக்கெட் போட்டிகளின் சரித்திரத்தைப் புரட்டிப்பார்க்கும் போது ஒவ்வொரு பாடசாலையின் பாரிய சமர் போட்டிகளின் போது ஒவ்வொரு வீரர் ஹீரோவாக இருந்திருப்பார். பாடசாலைகளை விட்டகன்றதும் அவர்கள் பெரு​மையுடன் உலக மட்டத்தில் தங்களை எடுத்துச் சென்றிருப்பார்கள்.

அவ்வாறு பாடசாலை மட்டத்தில் இருந்து உலக அளவுக்கு சென்ற ஒருவர்தான் ரொஷான் மஹாநாம. நாலந்தா கல்லூரிக்காக விளையாடிய நாட்களிலேயே கிரிக்கெட் விளையாட்டில் முத்திரை பதித்தவர் ரொஷான் மகாநாம. பாடசாலையில் அவர் காட்டிய அந்த திறமைதான் அவரை கிரிக்கெட் விளையாட்டில் உச்சம் தொட வைத்துள்ளது.

நாட்டின் முன்னோடி கிரிக்கெட் விருது வழங்கல் நிகழ்வான ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் விருது பாடசாலை கிரிக்கெட் வீரர்களை எப்போதும் ஊக்குவித்து வந்துள்ளது. அந்த விருது வளர்ந்து வந்த எங்களைப் போன்ற பாடசாலை வீரர்களை உற்சாகப்படுத்தியது. தங்கள் திறமைகள் அங்கிகரிக்கப்படுவது தெரியவரும் போது நாங்கள் இயல்பாகவே உற்சாகப்படுத்தப்படுவோம் என்கிறார் ரொஷான் மஹாநாம. 1983 மற்றும் 1984 ஆகிய இரு வருடங்களிலும் ஒப்சேர்வர் விருதை வென்ற பெருமைக்குரியவர் ரொஷான் மகாநாம.

ஒப்சேர்வர் விருதை வென்ற அந்த தருணத்தை மறக்க மடியாது என்று கழகமட்ட கிரிக்கெட் வாழ்க்கைக்கும் அதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கும் எனக்கு உந்துசக்தியாக இருந்தது அந்த விருதுதான். சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரராகத்தெரிவு செய்யப்பட்டமை எனது மனதை மேலும் திடப்படுத்தியது. மேலும் தீவிரமாக செயற்பட்ட வேண்டும் என்று நான் திடசங்கற்பம் பூண்டேன். அது என்னை மேலதிக உயரத்துக்கு எடுத்துச் சென்றது. சர்வதேச கிரிக்கெட்டை தொடுவதற்கு வழி வகுத்தது.

“அப்போது நாங்கள் விளையாடிய பாடசாலைப் போட்டிகளைப் பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் மைதானங்களில் திரண்டனர். பந்துல வர்ணபுர விளையாடிய காலத்தில் இருந்தே இந்த மாற்றம் ஏற்பட்டிருந்தது.

உச்சத்தை தொடுவதற்கு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை. இளம் பாடசாலை வீரர்கள் வெற்றியடைய வேண்டுமென்றால் அவர்களது இலக்குகளை அவர்கள் எட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம்” என்று ரொஷான் மஹாநாம கூறுகிறார்.

எங்கள் காலத்தை போலன்றி இப்போதுள்ள பாடசாலை வீரர்களுக்கு வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

19வயது மட்டத்திலேயே சர்வதேச மட்டப் போட்டிகள் இப்போது இடம்பெறுகின்றன. நான் நாலந்த கல்லூரிக்கான 5 வருடங்கள் விளையாடியிருந்த போதும் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா மட்டுமே கிடைத்தன. ஆனால் இப்போதைய வீரர்களுக்கு அதிக சுற்றுலாக்கள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் முழுப் பயனையும் அவர்கள் பெறுகிறார்களா என்பதுதான் சரியாகத் தெரியவில்லை” என்று ரொஷான் மஹாநாம கூறுகிறார்.

“எங்கள் காலத்தில் நாங்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது எமது நண்பர்கள் மற்றைய அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு நாங்கள் விளையாடுவதைப் பார்க்க மைதானத்துக்கு வருவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சொல்லப்போனால் எங்கள் பாடசாலையின் பழைய மாணவர்தான் இதில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள்” என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் விருதை தொடர்ந்து இரண்டு வருடங்கள் (1983 மற்றும் 1984) வெற்றிபெற்ற முதலாவது வீரர் ரொஷான் மஹானாம ஆவார்.

அதேபோன்று அர்ஜுன் ரணதுங்க (1980/1982) ஆகிய வருடங்களிலும், திலான் சமரவீர (1994/1995 ஆகிய வருடங்களிலும்) லஹிரு பீரிஸ் (2004/2005 ஆகிய வருடங்களிலும்) பானுக ராஜபக்ஷ (2010/ 2011 ஆகிய வருடங்களிலும்) சரித் அசலங்க (2015/ 2016 ஆகிய வருடங்களிலும்) இரண்டு தடவைகள் ஒப்சேர்வர் விருதை வென்ற பாடசாலை கிரிக்கெட் வீரர்களாவர்.

இளம் வீரர்கள் கிரிக்கெட் விளையாட்டு மதிக்கவேண்டும் என்றுதான் முதல் முதல் எங்களுக்கு சொல்லித் தரப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டின் கௌரவம், கலாசாரம் மற்றும் கொள்கைகள், விதிமுறைகள் முதலில் மதிக்கப்பட வேண்டும் அதேநேரம் எமது பயிற்சியாளர்கள், விளையாட்டுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் நடுவர்கள் மீது நாம் மிகுந்த மதிப்பையும் மரியாதையையும் வைத்திருந்தோம். அவ்வாறு இளைய தலைமுறை பாடசாலை வீரர்கள் நடந்துகொள்ளாததன் காரணமாகவே அவர்கள் இப்போது நேரடியாக தேசிய அணியில் இடம் பிடிக்க தவறி விடுகின்றனர்” என்று மஹாநாம குறிப்பிடுகிறார்.

அர்ஜுன ரணதுங்க, ரொஷான் மஹாநாம போன்ற வீரர்கள் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே தேசிய அணியில் இடம்பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் மே 31 ஆம் திகதி 54 வயதை எட்டும் ரொஷான் மஹாநாம இதுவரை 52 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கிறார்.

இதில் 2576 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் நான்கு சதங்களும் 11 அரைச்சதங்களும் அடங்குகின்றன. அவரது ஆகக் கூடிய தனியொரு டெஸ்ட் ஓட்டம் இந்தயாவுக்கு எதிராக 1997 இல் இவர் பெற்ற 225 ஓட்டங்களாகும்.

அந்த சந்தர்ப்பத்தில் சனத் ஜயசூரியவுடன் இணைந்து இவர் 576 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை மஹாநாம 213 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 5162 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 4 சதங்களும் 35 அரை சதங்களும் உள்ளடங்குகின்றன.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவனாக இருந்த ரொஷான் மஹாநாம சர்வதேச கிரிக்கெட் சபையின் போட்டித் தீர்ப்பாளராகவும் இருந்தவராவார்.

Wed, 02/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை