தமிழர் தரப்புடன் பேசுவதற்கு அரசு தயாரெனில் நாமும் தயார்

எப்போது? எங்கே? அரசு அறிவிக்க வேண்டும்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழர் தரப்புடன் அரசாங்கம் பேசுவதற்குத் தயார் என்றால் அரசுடன் பேசுவதற்கும் நாங்களும் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அப் பேச்சுவார்த்தை எப்போது எங்கே என்பது தொடர்பில் அறிவிக்கவில்லை. அதனை அறிவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

புதிய ஜனாதிபதி பதவியேற்ற பின்னராக புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இந் நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவிடம் கட்சியின் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் கேட்டிருந்தார். அதற்கு ஜனாதிபதியும் பேசத்தான் வேண்டும், பேசுவோம் என்றும் பதிலளித்திருந்தார். ஆனால் அப் பேச்சுவார்த்தை தொடர்பில் பின்னர் ஜனாதிபதி எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இவ்வாறான நிலையில் இந்த அரசின் அமைச்சர் விமல் வீரவன்ச தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்று அறிவித்திருக்கின்றார். ஆனால் பேச்சுவார்த்தை எப்போது எங்கே என்பது தொடர்பில் அறிவிக்கவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் தமிழ் தரப்புடன் பேசவேண்டுமென்றால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற கூட்டமைப்புடன் நிச்சயம் பேசவேண்டும். அதேநேரத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக முன்னைய அரசில் அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் மற்றும் இந்த அரசில் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இருக்கின்றனர். ஆகையினால் இவர்களுடன் பேசுவதென்றால் அவர்கள் தங்கள் கட்சிக்குள்ளேயே பேசலாம். இதனை விடுத்து தமிழர் தரப்பிலுள்ள எல்லோருடனும் பேசவேண்டுமென்று எந்த அடிப்படையில் சொல்கின்றனரோ தெரியவில்லை என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

 

Sat, 02/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை