தமிழ் மக்களின் காணி அபகரிப்பு நடந்தால் உடன் வெளிப்படுத்துங்கள்

தமிழரின் காணி அபகரிப்பு அரசின் கொள்கையல்ல

தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல. எவரும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் வகையில் செயற்பட்டால் அது தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்று நடைபெற்ற விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வவுனியா, தச்சங்குளத்தில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் வகையில் இனவாதச் செயற்பாடுகள் அரங்கேற்றப்படுவதாக சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.

தேர்தலின் பின்னர் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் சில செயற்பாடுகள் வேதனைக்குரியதாக உள்ளன. தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றன. அரசாங்கத்திடம் தமிழர்களின் நிலங்களை பறிக்கும் திட்டமேதும் உண்டா எனக் கேட்க விரும்புகின்றோம்.

வன்னியில் மூன்றுமுறிப்பு தச்சங்குளத்தில் உள்ள காணிகளில் பெரும்பான்மை மக்களை குடியேற்றும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. வவுனியா மாவட்ட அபிவிருத்தி சங்கத் தலைவரால் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

தமிழர்களின் காணிகள் அபகரிக்க முற்படுவதை அரசாங்கத்தில் அமைச்சர்களாகவுள்ளவர்கள் கண்டுகொள்ளவில்லை. குறித்த அமைச்சர் வடக்கில் சோதனை சாவடிகள் இல்லையென கூறிகிறார். பிரதமரிடம் நற்பெயரை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக அவர் அவ்வாறு கூறுகிறார்.

தமிழர்களின் காணிகளை திட்டமிட்டு பறிப்பதும் அதில் சிங்களவர்களை திட்டமிட்டு குடியேற்றுவதும் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பிரபாகரன் இல்லை என்பதால் தமிழிர்கள் இனி ஆயுதமேந்தி போராட முடியாதென அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.உண்மையில் ஆயுதமேந்தி போராடும் தேவை பிரபாகரனுக்கு இருக்கவில்லை. அவ்வாறான சூழ்நிலைக்கு தள்ளியது இவ்வாறான காரணிகள்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

வாசுதேவ நாணயக்கார

தமிழர்களின் காணிகளை சிங்கள மக்களுக்கு அபகரித்துக்கொடுப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல என்பதுடன், அரசாங்கத்தில் உள்ள எவரதும் கொள்கையுமல்ல. வவுனியா அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட முடியாது. இது தொடர்பிலான காரணிகளை முன்வைக்குமாறு கோருவதுடன், அரசாங்கம் உரிய நடவடிக்கையெடுக்கும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 02/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை