இ.போ.சபை பஸ்களில் பாரிய ரிக்ெகட் மோசடி தினமும் ஒரு கோடி ரூபா மோசடி

திடீர் சோதனைக்குழு நியமனம்

இ.போ.ச. பஸ்களில் கட்டண டிக்கட் மோசடி காரணமாக தினசரி ஒரு கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்ளும் நிலை காணப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

நாட்டில் 107 பஸ் டிப்போக்கள் காணப்படுகின்றன. அனைத்து டிப்போக்களிலும் இந்த கட்டண மோசடி இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போக்குவரத்து சபை தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இத் தகவல்களை அவர் வெளியிட்டார்.

மேலும் கூறுகையில்,

அடுத்த ஆறு மாதங்களுக்கிடையில் சகல மோசடிகளையும் தடுத்து இதனால் ஏற்படக்கூடிய இழப்பை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இ.போ.சபை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைக்கப்படும்.

சேவையிலீடுபடும் பஸ்களை சோதனையிடுவதற்கான திடீர் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சோதனைக் குழுக்களுக்கு முற்றிலும் மாறுபட்டதொரு குழுவாகவே இது அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார். இந்தக் குழு இரு தினங்களுக்கு முன்னர் கம்பஹா டிப்போவுக்குச் சொந்தமான பஸ்வண்டியை கடவத்தையில் வைத்து சோதனையிட்டபோது அன்றைய சேவையின் போது மட்டும் நடத்துனர் பத்தாயிரம் ரூபாவை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சொகுசு பஸ் வண்டி கடவத்தையிலிருந்து மாத்தறை வரையில் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தபோதே திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. உடனடியாக அந்த நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.

இந்த திடீர் சோதனைக்குழு 24 மணி நேரமும் சேவையிலீடுபடும். நாடு முழுவதும் நெடுந்தூர, குறுகிய தூர சேவைகளிலீடுபடும் அனைத்து பஸ்களையும் சோதனைக்குட்படுத்த பணிக்கப்பட்டுள்ளது. சில குறுகிய தூர சேவையிலீடுபடும் பஸ்களின் நடத்துனர்கள் நாளாந்தம் பயணிக்கும் பயணிகளுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டு இத்தகைய மோசடிகளிலீடுபடுகின்றனர்.

கடந்த ஒருவார காலத்துக்குள் 15 நடத்துனர்கள் மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மோசடியிலீடுபடுவோர் விடயத்தில் எவர் தொடர்பிலும் தயவுதாட்சண்யம் காட்டப்படமாட்டாது என்றார்.

 

 

Sat, 02/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை