இஸ்ரேல், அமெரிக்காவுடனான உறவை துண்டித்தது பலஸ்தீன்

டிரம்பின் திட்டத்தை அரபு லீக் நிராகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தை நிராகரித்த பலஸ்தீன அதிகாரசபை, பாதுகாப்பு தொடர்பான உறவுகள் உட்பட இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான உறவை துண்டித்துள்ளது.

கெய்ரோவில் கடந்த சனிக்கிழமை கூடிய அரபு லீக் அவசரக் கூட்டத்தில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இந்த அறிவிப்பை விடுத்தார். டிரம்பின் இந்த அமைதித் திட்டத்தை அரபு லீக் அமைப்பு நிராகரித்தது.

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்த இந்த அமைதித் திட்டத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலத்தில் அமைக்கப்பட்ட இஸ்ரேலிய குடியேற்றங்கள் அங்கீகரிக்கப்பட்டு, இராணுவம் அற்ற பலஸ்தீன தனி நாட்டை உருவாக்குவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“பாதுகாப்பு உறவுகள் உட்பட இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இனி எந்த உறவும் இல்லை என்பதை இஸ்ரேல் தரப்புக்கு நாம் அறிவுறுத்துகிறோம்” என்று அப்பாஸ் குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்புக் குறித்து இஸ்ரேல் உடன் எந்த பதிலும் கூறவில்லை.

பலஸ்தீன கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பாதுகாப்பு தொடர்பில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன அதிகாரசபையின் பாதுகாப்பு படைகளுக்கு இடையே நீண்ட காலமாக ஒத்துழைப்பு நீடித்து வருகிறது. அதேபோன்று அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ உடனும் பலஸ்தீன அதிகாரசபை உளவு தகவல்களை பரிமாறி வருகிறது.

இந்த அமைதித் திட்டம் பற்றி டிரம்புடன் தொலைபேசியில் உரையாடுவது அல்லது அது பற்றி பரிசீலனை செய்ய பிரதி ஒன்றை பெற்றுக்கொள்வதைக் கூட மறுத்துவிட்டதாக அப்பாஸ் குறிப்பிட்டார்.

“தம்முடன் தொலைபேசியில் பேசும்படி டிரம்ப் என்னைக் கேட்டார், நான் முடியாது என்று கூறிவிட்டேன். அவர் கடிதம் ஒன்றை அனுப்ப விரும்பினார் நான் அதனையும் மறுத்துவிட்டேன்” என்று அப்பாஸ் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை டிரம்ப் வெளியிட்ட திட்டத்தை முற்றாக நிராகரித்த அப்பாஸ், “நான் ஜெரூசலத்தை விற்றதாக எனது வரலாற்றில் பதிவாக நான் விடமாட்டேன்” என்று கூறினார்.

இந்த அமைதித் திட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களை அமெரிக்கா அங்கீகரிப்பதோடு ஜெரூசலம் இஸ்ரேலின் பிரிக்கப்படாத தலைநகர் என்று முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் பலஸ்தீனர்களின் குறைந்தபட்ச அபிலாஷைகளைக் கூட நிறைவேற்றவில்லை என்று கெய்ரோவில் கூடிய அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் குறிப்பிட்டிருப்பதோடு இதனை அமுல்படுத்த அமெரிக்காவுக்கு ஒத்துழைக்காது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராகக் கொண்டு 1967 மத்திய கிழக்கு யுத்தத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்த நிலங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால பலஸ்தீன நாடு உருவாக்கப்பட வேண்டும் என்று அரபு லீக் வலியுறுத்தியுள்ளது.

Mon, 02/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை