பந்துவீச்சு,களத்தடுப்பு, துடுப்பாட்டத்தில் பிரகாசித்து தொடரை வென்றது இலங்கை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் குசல் மெண்டிஸ் மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரின் அபார துடுப்பாட்டத்துடனும், பந்துவீச்சாளர்களின் பங்களிப்புடனும் இலங்கை அணி 161 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டி தொடரை 2--0 என கைப்பற்றியது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது. அதன்படி, களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 345 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை அணி சார்பாக ஆரம்பத்தில் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் 100 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய குசல் பெரேரா ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனாலும், அடுத்ததாக களமிறங்கிய குசல் மெண்டிஸ், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோவுடன் இணைந்து சிறப்பாக ஓட்டங்களை குவித்தார்.

இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 239 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இந்த இணைப்பாட்டமானது இலங்கையில் வைத்து இரண்டாவது விக்கெட்டுக்காக பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக பதிவாகியது.

தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை பதிவுசெய்த குசல் மெண்டிஸ் 119 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அவிஷ்க பெர்னாண்டோவும் தன்னுடைய இரண்டாவது சதத்தை கடந்து 127 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் களமிறங்கிய திசர பெரேரா 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, வனிந்து ஹசரங்க மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 17 ஓட்டங்களை பெற்றனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை பொருத்தவரை ஷெல்டன் கொட்ரல் 4 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இலங்கை அணியின் இந்த ஓட்ட எண்ணிக்கையானது ஒருநாள் போட்டிகளில் சிக்ஸர்கள் இல்லாமல் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது.

கடினமான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 39.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை பெற்று, 161 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டது. இதன்படி, ஓட்டங்களின் அடிப்படையில் (161) மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பெற்ற மிகச்சிறந்த வெற்றியையும் இலங்கை அணி பதிவுசெய்தது. மேற்கிந்திய தீவுகள் சார்பாக சிறந்த ஆரம்ப இணைப்பாட்டம் பெறப்பட்ட போதும், அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் எதிர்பார்த்த அளவில் பிரகாசிக்கவில்லை. டெரன் பிராவோ, ரொஸ்டன் ஷேஸ் ஆகியோர் ஓட்டங்களை குவிக்க தொடங்கிய போதும், மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கைக்கு செல்ல தவறியிருந்தனர். இதில், கீரன் பொல்லார்ட் வந்த வேகத்தில் ஓட்டங்கள் இன்றி, வனிந்து ஹஸரங்கவின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருக்க, களத்தில் இருந்து துடுப்பெடுத்தாடிய நிக்கோலஸ் பூரன் ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். எனினும், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓட்ட வேகம் குறைவாக நகர்ந்ததன் காரணமாக அவரின் முயற்சியும் வீணாக, அணியால் வெற்றியிலக்கை அடையமுடியவில்லை.

மேற்கிந்திய தீவுகள் சார்பாக அதிக பட்சமாக ஷேய் ஹோப் 51 ஓட்டங்களையும், நிக்கோலஸ் பூரன் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நுவன் பிரதீப் 2 விக்கெட்டுகளையும் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை சிறந்த துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்திலும் பிரகாசித்த இலங்கை அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி முதலாம் திகதி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Fri, 02/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை