புத்தூர் கிந்துப்பிட்டி மயானத்தில் சடலத்தை எரிப்பதற்கு எதிர்ப்பு

பிரதேசவாசிகள் அணிதிரண்டு ஆவேசம் பொலிஸார், படையினர் வரவழைப்பு

புத்தூர் மேற்கு,சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மயானத்தில் சடலம் எரியூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் நேற்று பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சடலமொன்றை எரிப்பதற்கு தயாரானபோதே,பொது மக்கள் இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன் புத்தூர் கலைமதி கிராமத்திலுள்ள மயானத்தை அகற்றுமாறும் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்ட னர்.இம்மயானத்தில் சடலத்தை எரியூட்டுவதா? இல்லையா என்ற சர்ச்கை நீதிமன்றம் வரைச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இம்மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு 2017 ஆம் ஆண்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித் திருந்தது."மயானத்தைச் சுற்றி மதில் அமைத்து சடலங்களை அங்கு எரியூட்ட முடியும். அதனைத் தடுக்க முடியாது. அங்கு குழப்பம் விளைவித்தாலோ மதிலை உடைத்து அத்துமீறினாலோ பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என மல்லாகம் நீதிமன்றம் 2017 இல் உத்தரவிட்டிருந்தது.

பின்னர் இத்தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து மயானத்தை சூழவுள்ள மக்கள் சார்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.வழக்கின் எதிர் மனுதாரர்களாக கிந்துப்பிட்டி மயான நிர்வாகம், அச்சுவேலி பொலிஸார் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டனர்.

இந்த சீராய்வு மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, இந்த மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு யாழ்.நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்தது. சுமார் இரண்டு வருடங்களாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த இந்த சீராய்வு மனு மீதான விசாரணையின் இறுதிக் கட்டளை கடந்த நவம்பர் 8ஆம் திகதி வழங்கப்பட்டது.இதில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கிய உத்தரவை ரத்துச் செய்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தது.இந்தப்பின்னணியிலே நேற்று இம்மயானத்தில் சடலத்தை எரிப்பதற்கு பிரதேசவாசிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

(யாழ்.விசேட நிருபர்)

 

 

Fri, 02/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை