எதேச்சதிகாரத்துக்கு இடமளிக்க முடியாது

சஜித் தலைமையிலேயே அரசாங்கம் அமையும்

ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பு சர்வாதிகாரத் தன்மையுடன் கூடியதென சாடியிருக்கும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, ஜனநாயக அரசியல் பாதையில் எதேச்சதிகாரத் தன்மைக்கு இடமளிக்க முடியாதெனவும் தெரிவித்தார்.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.மேலும் குறிப்பிடுகையில்,

கட்சியின் யாப்பில் திருத்தம் கொண்டுவரப்பட  வேண்டியதன் அவசியத்தை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நாம் சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு ஜனநாயகத்தின் போர்வையில் சர்வாதிகாரத் தன்மை கொண்டதாகவே காணப்படுகின்றது.

அதிகார வெறி கொண்டவர்களின் கைகளுக்கு கட்சி அதிகாரம் போகுமானால் என்ன நடக்கும் என்பதை இன்று நாம் வெளிப்படையாகவே கண்டுகொண்டுள்ளோம். இனியும் காலம் கடத்தப்படுமானால் ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனநாயகம் இல்லாது போகும். கட்சியை சரியான ஜனநாயக வழிக்குக் கொண்டுவர நாம் முயற்சியெடுத்து வருகின்றோம்.

பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நாம் தயாராகி விட்டோம். சஜித் பிரேமதாஸ தலைமையில் பலமுள்ள முன்னணியாக ஐக்கிய தேசிய முன்னணி அமைக்கப்பட்டு திறமை மிக்க வேட்பாளர்கள் களமிறங்கப்படுவார்கள். இளைஞர்கள், மகளிர் பிரதிநிதித்துவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

அடுத்த பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸவை பிரதமராகக் கொண்ட அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரயத்தனத்தை முன்னெடுப்போம். 2025 வரையான அரசாங்கம் சஜித் தலைமையிலேயே அமையும் என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றோம் என்றார்.

 

எம்.ஏ.எம். நிலாம்

Sat, 02/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை