வைரஸ் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற்றம்

கொவிட்–19 உயிரிழப்பு 2000ஐ தாண்டியது

ஜப்பானில் வைரஸ் பாதிப்பால் கடந்த 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு யொக்கோஹாமவுக்கு அப்பால் நங்கூரமிடப்பட்டிருந்த சொகுசு கப்பலில் இருந்து பயணிகள் நேற்று வெளியேற ஆரம்பித்தனர்.  

டயமன்ட் பிரின்சஸ் கப்பலின் ஊழியர்கள் மற்றும் பயணிகள் என குறைந்தது 542 பேருக்கு கொவிட்–19 வைரஸ் தொற்று ஏற்பட்டது. இது சீன பெரு நிலத்திற்கு வெளியில் அதிக வைரஸ் பாதிப்பாக இருந்தது. இதனால் கப்பலில் இருந்தவர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். நோய் தொற்று தொடர்ந்து பரவி வந்த நிலையிலும் சில நாடுகள் கப்பலில் இருந்து தமது குடிமக்களை வெளியேற்றின.  

இந்நிலையில் சீனாவில் கொவிட்–19 வைரஸினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நேற்று 2,004 ஆக அதிகரித்துள்ளது. சீன பிரதான நிலத்தில் 74,185 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர, சீனாவுக்கு வெளியில் சுமார் 700 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  

ஹொங்கொங்கில் வைரஸ் பாதிப்பினால் 70 வயது ஆடவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். அங்கு இந்த வைரஸினால் உயிரிழக்கும் இரண்டாமவர் இவர் ஆவார். தவிர, பிரான்ஸ், ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்வானில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.  

இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான 44,000 சம்பவங்கள் குறித்த ஆய்வு விபரத்தை சீனா கடந்த வியாழக்கிழமை வெளியிட்டிருந்தது. கொவிட்–19 வைரஸினால் நோயுற்றவர்கள் மற்றும் முதியவர்களே அதிகம் உயிரிழப்பது அந்த அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.  

இந்நிலையில் டயமன்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்து வெளியேறிய முதல் பயணி விரைவாக டக்சி அல்லது ரயிலை பிடிப்பதற்காக சென்றுவிட்டார் என்று அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நோய் இல்லை என்று சோதனை மூலம் உறுதி செய்யப்பட்ட மேலும் சுமார் 500 பேர் அந்தக் கப்பலில் இருந்து நேற்று வெளியேறவிருந்தனர். எதிர்வரும் நாட்களில் மேலும் பலர் வெளியேறவுள்ளனர்.  

இந்தக் கப்பலில் மொத்தம் 3,700 பயணிகள் மற்றும் உழியர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

நோய் தொற்று இல்லாத ஆனால் நோய் தொற்று உள்ளவர்களுடன் கப்பலில் இருந்தவர்கள் மேலும் சில காலம் கப்பலில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். 50க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பயணிகளை ஏற்றி இருந்த இந்த சொகுசுக் கப்பல் கொவிட்–19 வைரஸ் உலகெங்கும் பரவச் செய்யும் மூலமாக அமைய வாய்ப்பு இருந்த நிலையிலேயே அந்தக் கப்பல் ஜப்பானில் தடுக்கப்பட்டது.  

ஹொங்கொங்கில் தரையிறங்கிய ஒருவருக்கு வைரஸ் தொற்றியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பெப்ரவரி ஆரம்பத்தில் யொக்கொஹாமாவுக்கு அப்பால் அந்தக் கப்பல் தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

பயணிகள் அரம்பத்தில் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டதோடு தொடர்ந்து அவ்வப்போது கப்பல் தளத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.  

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தபோதும் கப்பலில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று சம்பவங்கள் அதிகரித்து வந்தன.  

இதன்படி குறைந்தது 542 பேருக்கு வைரஸ் தொற்றியது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.  

இதேவேளை இந்த வைரஸ் காரணமாக ரஷ்யாவுக்குள் நுழையச் சீனக் குடிமக்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இன்று தொடக்கம் அந்தத் தடை அமுலுக்கு வரவுள்ளது.  

சுற்றுப்பயணிகள் உட்பட வேலைக்காகவோ கல்விக்காகவோ ரஷ்யாவுக்குள் நுழைய விரும்பும் அனைத்துச் சீனக் குடிமக்களுக்கும் அது பொருந்தும். எனினும், மொஸ்கோ வழியாக வேறு நாடுகளுக்குச் செல்வோர் பாதிக்கப்படமாட்டார்கள். இப்படிப்பட்ட கடுமையான நடவடிக்கையை எடுக்கும் முதல் நாடு ரஷ்யாவாகும். மோசமடைந்துவரும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கை அவசியம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். 

ரஷ்யாவில் உள்ள இருவருக்குக் வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் இருவரும் சைபீரியாவைச் சேர்ந்த சீனக் குடிமக்களாவர்.  

சுமார் 25 நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், சர்வதேச பொருளாதாரத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.  

மருந்து தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களில் 68 வீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மருந்து தயாரிப்பாளர் பொதுவாக 2 முதல் 3 மாதங்களுக்கு மட்டுமே இருப்பு வைத்திருப்பார்கள் என்ற நிலையில், கொரோனா பாதிப்பு மேலும் தொடர்ந்தால் மருந்துகளின் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதேபோன்று தொலைக்காட்சிக்கு தேவையான உதிரி பாகங்கள் 75 வீதமும், தொலைபேசிகளுக்கு தேவையான பாகங்கள் 85 வீதமும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 

கொரோனா வைரஸ் தாக்குதலால், சீனாவில் பொருளாதார நடவடிக்கைகள் மந்தமடைந்துள்ளன. இதன் காரணமாக மசகு எண்ணெய் இறக்குமதியை 25 வீதம் வரை சீனா குறைத்துள்ளது. இதனால் கடந்த 45 நாட்களில் மசகு எண்ணெய் விலை சுமார் 20 வீதம் வரை சரிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் 66.42 டொலராக இருந்த மசகு எண்ணெய்யின் விலை பெப்ரவரி 11ஆம் திகதி 54.03 டொலராக குறைந்துள்ளது. 

ஏற்கனவே வாகனங்களின் விற்பனை குறைந்துள்ள நிலையில், பி.எஸ் 6 வாகனங்களுக்கு தேவையான முக்கியமான உதிரி பாகங்களில் சுமார் 30 வீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஒரு உதிரி பாகம் இல்லை என்றாலும் அது வாகன தயாரிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது. இதில் கொரோனா வைரஸ் பரவலால் பாதிப்படைந்துள்ள மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் உள்ளது. மார்ச் மாதக் காலாண்டின் முடிவில் எதிர்பார்த்ததைவிட குறைவான விற்பனையே பதிவாகும் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  

சீனப் புத்தாண்டிற்குப் பின் தொடர வேண்டிய தொழிற்சாலைகளின் செயல்பாடும் தடைபட்டுப்பட்டுள்ளன.  

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனையும் மற்ற கருவிகளையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படத் ஆரம்பித்துள்ளன. ஆனால் அவை எதிர்பார்த்ததைவிட மெதுவாகச் செயல்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் உலகெங்கும் ஐபோன் விற்பனை பாதிக்கப்படும். 

கடந்த காலாண்டு ஐபோனின் லாபத்தில் 15 வீதம் சீனாவிலிருந்து வந்தது. தற்போது சீனாவில் ஐபோன் விற்கும் கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. இயங்கும் சில கடைகளும் குறைவான நேரத்திற்கே செயல்படுகின்றன. 

கைத்தொலைபேசிகளின் மிகப் பெரிய சந்தையான சீனாவில், வைரஸ் பரவலின் விளைவால் கைத்தொலைபேசி விற்பனை பாதியாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.     

Thu, 02/20/2020 - 12:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை