சமத்துவ மக்கள் சக்திக்கு அன்னம் சின்னத்தை வழங்க ஐ.தே.க இணக்கம்

சமத்துவ மக்கள் சக்திக்கு அன்னம் சின்னத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளரான ஷமிலா பெரேரா இணக்கம் தெரிவித்திருப்பதாக மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை யில் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் அக் கட்சியின் குழுவொன்று ஹாமிலா பெரேராவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. நீண்ட கலந்துரையாடலின் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் சின்னத்தை பொதுத் தேர்தலில் சமத்துவ மக்கள் சக்தி பயன்படுத்த அனுமதிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

சமத்துவ மக்கள் சக்தி கூட்டணியாக காணப்படுவதால் அதில் ஐக்கிய தேசிய முன்னணியும் ஒரு பங்காளியாக உள்வாங்கப்படுகிறது. இதன்மூலம் அன்னம் சின்னத்தை தேர்தலில் சமத்துவ மக்கள் சக்தி பயன்படுத்த சட்ட ரீதியான அங்கீகாரம் ஏற்பட்டுள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு திகதி அறிவிக்கப்பட்டவுடன் இந்த இணக்கப்பாடு குறித்த ஆவணத்தை தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மத்துமபணடார தெரிவித்தார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா புறப்படுவதற்கு முன்னர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களைச் சந்தித்து சின்னம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஒருவாரத்துக்குள் தீர்த்துக்கொள்ள முயற்சிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கிச் சென்றுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராகவும் ரணில் விக்கிரமசிங்க காணப்படுவதால் அதன் செயலாளராக காணப்படும் ஷர்மிளா பெரேரா, தலைமைத்துவத்துடன் கலந்துரையாடிய பின்னரே இந்த உடன்பாட்டுக்கு வந்ததாக ஐ. தே. க. வட்டாரம் தெரிவித்தது.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரெமதாச நேற்றைய தினம் கண்டி தலதாமாளிக்கைக்குச் சென்று வழிபட்டதன் பின்னர் அஸ்கிரிய, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்கர்களை சந்தித்து தனது அடுத்தகட்ட அரசியல் செயற்பாடுகள் குறித்து எடுத்துக்கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் காணப்பட்ட முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி ஆதரவுடனேயே சமத்துவ மக்கள் சக்தியாக தேர்தலில் களமிறங்குவதாகவும் அவர் மகா சங்கத்தினரிடம் எடுத்துரைத்துள்ளார்.

எம். ஏ. எம். நிலாம்

 

 

Sat, 02/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை