கட்சி மாறபோவதான செய்தி உண்மைக்கு புறம்பானது

பாராளுமன்ற உறுப்பினர் நஸீர்

கட்சி மாறப்போவதாக சமூக இணையத்தளங்களில் வரும் செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். நான் ஒரு போதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் ஏற்பாட்டில் சமகால அரசியல் பற்றிய கலந்துரையாடல் மத்திய குழுவின் தலைவர் எஸ்.எல்.ஏ.ஹலீம் தலைமையில் நேற்று முன்தினமிரவு (01) நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

அம்பாறை மாவட்டத்தில் எனக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதால் இதை தாங்க முடியாத சில தீய சக்திகள் எனது பெயரைக் கலங்கப்படுத்தும் வண்ணம் இவ்வாறான கதைகளைக் கட்டி சமூக இணையத்தளங்கள் மூலமாகப் பரப்பி வருகின்றனர். இச்செயற்பாட்டை ஒரு போதும் மன்னிக்க முடியாது.இதற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூலம் நான் கடந்த 2011ம் ஆண்டு முதல் தடவையாக அரசியலுக்குள் பிரவேசித்து அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று தவிசாளராகி பின்னர் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாண சபை உறுப்பினரானேன், அதன் பின்னர் இரு வருடங்கள் மாகாண சுகாதார அமைச்சராகவும் பின்னர் இரண்டு வருடகாலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இந்த பிராந்தியத்தின் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றேன். இக்கட்சியின் மூலம் குறுகிய காலத்தில் பல அரசியல் அதிகாரங்களைப் பெற்று மக்களுக்கு சேவையாற்றி வருவதை யாரும் எழிதில் மறந்திட முடியாது.

முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நான் விலகி முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைப்போவதாக வரும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனித்துப்போட்டியிட்டாலும் அல்லது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டாலும் தலைவரின் ஆசீர்வாதத்துடன் தேர்தலில் போட்டியிட உள்ளேன்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பாராளுமன்றத் தேர்தலுக்கு முதல் நடைபெறுமானால் நான் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன். அத்தேர்தலில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அட்டாளைச்சேனை மண்சார்பாக போட்டியிடுவார் என்றார்.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

Mon, 02/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை